பயனற்ற நிலையில் நடைபாதை...இருப்பு கூட தெரியாத அவலநிலை!!!

பயனற்ற நிலையில் நடைபாதை...இருப்பு கூட தெரியாத அவலநிலை!!!

சென்னை காரணீஸ்வரர் தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நடைபாதை இருப்பது கூட தெரியாமல் பயனற்ற நிலையில் காணப்படுகிறது.

குறையும் சாலை:

சென்னையில் மையப்பகுதியாக பார்க்கப்படக்கூடிய மயிலாப்பூர் பகுதியில் காரனேஸ்வரர் தெரு அமைந்துள்ளது.  மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறத்தில் இருந்து சென்னை காமராஜர் சாலையை இணைக்க கூடிய வகையில் நீண்ட சாலையாக காரனேஸ்வரர் தெரு அமைந்துள்ளது.  சமீப நாட்களாக இந்த சாலையின் அளவு என்பது குறைந்து கொண்டே வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனியாருக்கு:

சாலையின் ஒரு புறம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த நடைபாதையை மறைக்கும் அளவுக்கு நீண்ட வரிசையில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று மறுபுறம் அந்தந்த வீட்டின் வாகனங்கள் மற்றும் நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெரியாத நடைபாதை:

வாகனங்களின் நீண்ட வரிசை காரணமாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை என்பது இருப்பதே தெரியாமல் போய்விட்டது.  இதன் காரணமாக அந்த நடைபாதையை பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

முக சுழிப்பு:

இந்தப் பகுதியில் நடைபாதை இருப்பது கூட தெரியாத அளவிற்கு வாகனங்களால் நடைபாதை மறைக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அந்த மறைவில் சென்று பலர் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.  பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள் இந்த வழியாக செல்லும்போது துர்நாற்றத்தின் காரணமாக முகம் சுழிப்புடன் சென்று வருகின்றனர்

சட்டவிரோதமாக:

இந்த சாலை என்பது மிகப்பெரிய சாலை தான் எனினும் தனியார் நிறுவனத்தின் டிராவல்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் பேருந்து செல்வதற்கு கூட மிகுந்த சிரமமாக உள்ளது.  அதுமட்டுமல்லாமல் சாலையின் ஓரமாகவே ஜல்லி மணல் போன்றவற்றை கொட்டி வைத்து வருகின்றனர்.  நடைபாதையின் மேலும் கட்டுமான கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.  அந்த நடைபாதை மறைவில் சில இளைஞர்கள் இரவு நேரங்களில் புகைபிடித்தல் போன்ற சட்டவிரோத செயல்களையும் செய்து வருகின்றனர்.

கோரிக்கை:

சென்னை மாநகராட்சி சிங்காரச் சென்னை 2.0 போன்ற பல்வேறு சென்னை அழகுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் மாநகராட்சியின் உள்ளேயே பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ள நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்றும் இந்த பகுதியில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு சுகாதாரமான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே காரணீஸ்வரர் தெருவில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிக்க:  விளம்பரத்திற்காக விமர்சிக்கும் துணைநிலை ஆளுநர்...!!!