42 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை..!

பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கவலை..!

42 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை..!

பாமக துவங்கி 42 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை என்பது வேதனையளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சி 1989-களில் மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்டது. வன்னியர் சமூகத்தை சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது பிற்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது. ஆரம்பத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரலாக ஒளித்துக் கொண்டிருந்த பாமக, போக போக தனது சமூகத்தை சேர்ந்த மக்களுக்காக சுருங்கி, ஒரு சாதி கட்சியாகவே மாறிவிட்டது. சமூகம் மாறிக்கொண்டே இருக்கிறது. தொழிற்நுட்பங்களும் மக்களின் மனமும், முன்னேற்றமும், பழக்க வழக்கங்களும் மாறி, சாதி, மதத்தை விட்டு மெல்ல மெல்ல வெளியே வந்துக் கொண்டிருக்கும் வேளையில், பாமக இன்னும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மக்களிடம் சாதி ஒன்றை திணித்துக் கொண்டே தான் இருக்கிறது. வன்னியர் சமுதாய மக்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியின் போது, சட்டமன்ற தேர்தலின் கூட்டணிக்காக 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இருந்தும் நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதித்தது. பாமகவில், தலைவர் பதவியை தவிர்த்து வாரிசு அரசியல் என்ற ஒன்று பின்பற்றப்பத்தான் படுகிறது. ராமதாஸை தொடர்ந்து கட்சியை வழிநடத்தும் பொறுப்பு அன்புமணிக்கு வழங்கப்பட்டது. அவர் நன்கு படித்தவர், அரசியல் பற்றின நுணுக்கங்களை தெரிந்து கொண்டவர் என மக்கள் நம்பினாலும் கூட, காலப்போக்கில் அவரும் அவரது தந்தையைப் போலவே ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைந்து போனதாலும், பெரிதாக மக்கள் முன்னிலையில் தோன்றாததாலும் மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 

ஆனால் இன்றும் ராமதாஸ் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி நல்லவர், திறமை சாலி அவரை எப்படியேனும் முதலமைச்சர் ஆக்கியே ஆக வேண்டும் என நிர்வாகிகளிடம் கூறி வந்து கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு மேடையிலும் அவர் பேசும் பேச்சும், நிர்வாகிகளை சாடுவதும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் ஜி.கே.மணி, சிறப்பு விருந்தினராக டாக்டர் ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ராமதாஸ், கடந்த இரு ஆண்டுகளாக தொண்டர்களை சந்திக்க முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன்.தற்போது கொரோனா வந்தாலும் பரவாயில்லை.இனிமேலாவது தொண்டர்களை ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்திக்க முடிவு செய்துள்ளேன்.இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் இதுவரை யாரும் வன்னியர்கள் இல்லை, பாமக துவக்கி 42 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒட்டுமொத்த வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை. என்ன காரணம் என ஆராயும்போது நாம் ஒன்று சேர கூடாது என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள் வன்னிய மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. வன்னியர் சமுதாய மக்கள் மாறி,மாறி பல்வேறு கட்சியினருக்கும் வாக்களிப்பதால் தான் பெரும்பான்மையான சமூகமாக இருந்தும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை, பல கட்சிகளிலும் பிரிந்து கிடப்பவர்கள் ஒருமுறையாவது பாமகவுக்கு வாக்களித்தால் தான் நமது கட்சியின் பலம் பிறருக்கு தெரிய வரும்.மற்ற சமுதாயத்தினர் அன்புமணி முதல்வராகி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.இது வேண்டுமென்றே செய்யப்பட்ட அநியாயமான தீர்ப்பாகும் என வழக்கம் போல சாடியவர், 18 வயதுக்கு மேற்பட்ட உள்ளவர்கள் வாக்குரிமை உள்ளவர்கள். பாமகவுக்கு வாக்கு செலுத்தவில்லை என்றால் உங்கள் தலையிலேயே எரிகிற கொல்லி கட்டையை பொட்டுகொள்ளும் நிலை ஏற்படும் என உணர்ச்சி பொங்க பேசினார். 

ஆனால் நிர்வாகிகளுக்கும், மக்களுக்கும் பாமக தலைமை மீதான வருத்தம் என்னவென்றால், அவரது மகன் மட்டும் அமைதியாக வீட்டுக்குள்ளேயே இருந்து கொள்வாராம், நாடாளுமன்றத்திற்கு கூட போக மாட்டாராம், ஆனால் அவரை முதலமைச்சர் ஆக்க நாங்கள் வீடு வீடாய் போய் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. தான் ஒரு முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால், தனது கட்சியாலும், தன்னாலும் மக்களுக்கு என்ன செய்ய முடீயும் என்பதை அவர் தான் வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துக் கூறி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இப்படி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சாடுவது சரியானது ஆகாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். காலம் போற போக்கில் நாமும் சற்று மாறித்தான் ஆக வேண்டும். மீண்டும் மீண்டும் வன்னியர் சமுதாய மக்கள் ஆண்ட பரம்பரை என சாதி பெருமை பேசி, அவர்களை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டிருந்தால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட ஆள் இல்லாமல் போன கதை தான் எதிர்காலத்திலும் நிகழும் என்கின்றனர்...