43 நாட்கள் கடந்தும் உண்மை வெளிவரவில்லை...நீதி கேட்டு நடைப்பயணம் மேற்கொள்ளும் பெற்றோர்கள்...!

43 நாட்கள் கடந்தும் உண்மை வெளிவரவில்லை...நீதி கேட்டு நடைப்பயணம் மேற்கொள்ளும் பெற்றோர்கள்...!
Published on
Updated on
1 min read

மகள் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபயணமாகச் சென்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

மாணவி ஸ்ரீமதியின் மரணம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் பள்ளி வளாகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். 

கலவரம்:

ஜூலை 13 ஆம் தேதி உயிரிழந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, வழக்கு தொடர்ந்ததையடுத்து, அமைதியான வழியில் போராட்டம் நடத்திய மாணவியின் உறவினர்கள், ஜூலை 17 ஆம் தேதி பூதாகரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. 

பள்ளி நிர்வாகிகள் கைது: 

மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், நிர்வாகிகள் என பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை:

இதற்கிடையில் மாணவியின் உடல் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அறிக்கை தாக்கல்:

இந்நிலையில், ஸ்ரீமதியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கையினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதோடு, ஸ்ரீமதியின் நெருங்கிய தோழிகளான இரண்டு மாணவிகளிடம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

மாணவி பெற்றோர் மனு தாக்கல்:

இந்நிலையில் இன்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம், தாயார் செல்வி மற்றும் அவரது வழக்கறிஞர் காசிவிசுவநாதன் ஆகியோர் ஜிப்மர் மருத்துவ பரிசோதனை அறிக்கையினை கேட்டு மனு தாக்கல் செய்தனர். 

நீதி கேட்டு வரும் வெள்ளிக்கிழமை நடைபயணம்:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி,   பெரிய நெசலூரிலிருந்து  வருகிற வெள்ளிக்கிழமை நடைபயணமாக புறப்பட்டுச் சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க இருப்பதாக கூறினார். மேலும், தனது மகள் இறப்பிற்கு நீதி கேட்டு மனு அளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மாணவி இறந்து  43 நாட்கள் கடந்தும் , இதுவரை உண்மை வெளிவரவில்லை என்று கூறிய அவர்,   பள்ளி நிர்வாகத்திற்கு  90 சதவீதம் அதிகாரிகள் விலை போய் விட்டதாகவும் குற்றம் சாட்டினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com