வணிகம் முதல் காலனித்துவம் வரை........!!!!!

வணிகம் முதல் காலனித்துவம் வரை........!!!!!

ஐரோப்பாவில் இரு பிரிவினர்களுக்கிடையே கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  வீழ்வதும் எழுவதும் இரு பிரிவினர்களிடையேயும் நடந்து கொண்டிருந்தது.  வெற்றி பெறுவது யார் என்ற போராட்டம்.  இறுதியாக ஒட்டமான் பேரரசு கான்ஸ்டாண்டி நோபிளின் கோட்டையை தாக்கி வெற்றியும் பெற்றது.  பல நாடுகளால் முடியாததை 1453 மே 29ல் நிகழ்த்தி காட்டினார் ஒட்டமான் பேரரசர் சுல்தான் இரண்டாம் மெஹம்மது.   "நாங்கள் நிலங்களை வெல்வதில்லை, இதயங்களை வெல்வோம். ""நிகழ்தகவுகளின் எல்லைகளைக் காண, சாத்தியமற்ற முயற்சி செய்ய வேண்டும். " என்ற வரிகள் போரில் பல மக்களைக் கொன்ற பின்பு மெஹம்மதுவின் வார்த்தைகள்.  அவரது சாத்தியமற்ற முயற்சி இந்த வெற்றியை பரிசாக தந்தது.  ஆனால், இந்த வெற்றி இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்ற போகிறது என்பதை எவராலும் யூகித்திருக்க முடியவில்லை.

நிராகரிக்கப்பட்ட வாய்ப்பு:

தரைவழி போக்குவரத்திற்கு முக்கிய நுழைவாயிலாக இருந்த கான்ஸ்டாண்டி நோபிள் கைப்பற்றப்பட்டதும் வணிகத்திற்கான அதன் கதவுகள் அடைக்கப்பட்டன.  அப்போது வாணிபம் செய்ய மன்னர்கள் மனதில் தோன்றிய புதிய வழியே கடல்.  தொலைதூர கடல் வாணிபம் சாத்தியமா என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் அதற்கான முதல் விதை போர்ச்சுக்கல் மன்னர் இரண்டாம் ஜோவோவால் போடப்பட்டது.  முதலில் கடல் பயணம் செய்யும் வாய்ப்பு வாஸ்கோடா காமாவின் தந்தைக்கு அளிக்கப்பட்டது.  ஆனால் அவர் பயணம் தொடங்கும் முன்பே இறந்துவிட்டதால் அந்த வாய்ப்பு  அவரது அண்ணனுக்கு அளிக்கப்பட்டது.   அண்ணனால் நிராகரிக்கப்பட்ட வாய்ப்பை இறுக்கமாக பற்றிக்கொண்டார் வாஸ்கோடா காமா.  அதனால்  முதன் முதலாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீர் வழிப் பாதையைக் கண்டுபிடித்தவர் என்ற சிறப்பையும் பெற்றார்.  வாய்ப்பு வரும் போது பயன்படுத்துபவர்களால் மட்டுமே இத்தகைய சிறப்பை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக மாறியவர் வாஸ்கோடா காமா.  

கைவிடப்பட்ட நம்பிக்கை:

வாஸ்கோடா காமாவிற்கு முன்னரே போர்ச்சுக்கல் மாலுமி பார்த்தலோமிய டயஸ் அவரது குழுவினருடன் கடல்வழி பயணத்தை 1487ல் மேற்கொண்டார்.  ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை ஓரமாகப் பயணம் செய்து ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை அடைந்தார்.  பெரும் கடல் சீற்றத்தால் பயணத்தைப் பாதியிலேயே கைவிட்டு போர்ச்சுக்கல் திரும்பினார் டயஸ்.  ஆனாலும் நாங்கள் இவ்வளவு தொலைவைக் கடந்துள்ளோம் நிச்சயம் உங்களால் இதற்கு மேலும் பயணிக்க முடியும் என்ற தன்னமிக்கையை அவருக்கு பின்வரும் மாலுலிகளுக்கு  ஊட்டும் விதமாக ”நன்னம்பிக்கை முனை “ என பெயர் வழங்கி அவரது முயற்சியை கைவிட்டு திரும்பினார்.

உறுதியான நம்பிக்கை:

டயஸ்க்கு பின்னர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு 1497ல் வாஸ்கோடா அவரது பயணத்தை 4 கப்பல்களுடனும் 170 பயணிகளுடனும் தொடங்கினார்.  அவர் பயணம் செய்த கப்பலுக்கு சௌ கேப்ரியேல் எனப் பெயரிடப்பட்டது.  90 நாட்கள் நிலத்தையே காணாமல் கடலில் பயணம் செய்த அவர்கள் 1497 நவம்பர் 22ல் நன்னம்பிக்கை முனையை அடைந்ததும் அவர்களுக்குள்ளான உற்சாகம் மேலும் அதிகரித்தது.  மிகுந்த ஆர்வத்துடன் பயணத்தை தொடர்ந்தனர்.  யாரும் சாதிக்க இயலாததை அவர் சாதிக்க போகும் வெற்றி களிப்பு அது.  அவர்களின் பயணம் ஒன்றும் ரோஜா பாதை போல அமையவில்லை.  வழியில் பல எதிப்புகளை சந்திக்க நேர்ந்தது.  அரேபியர்களால் தாக்கப்பட்டனர்.  விவேகமாக செயல்பட்டு அவர்களை முற்றிலுமாக அழித்தார் வாஸ்கோடா காமா.  அங்கிருந்து குஜராத்தி மாலுமியை தன்னோடு சேர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார் வாஸ்கோட காமா.  அவரது வழிகாட்டுதலின் படி அரேபிய கடலை மிக கவனமாக கடந்து இறுதியாக 1497 ஜூலை 8 அன்று தொடங்கிய பயணத்தை வெற்றிக்கரமாக 1498 மே 20 அன்று முடித்தார் வாஸ்கோடா காமா.  அரபிக் கடலின் ஒரு பகுதியான மலபார் கடற்கரையின் கோழிக்கோட்டை வந்தடைந்தார் காமா.

மறைக்கப்பட்டதா வரலாறு: 

சாமரின் ஆட்சியாளர்கள் பகுதியை சென்றடைந்த காமா அவர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார்.  மிகவும் மரியாதையுடன் உபசரிக்கபட்டார்.  மூன்று மாத காலத்திற்கு பின்பு போர்ச்சுக்கல் திரும்புகையில் சாமரின் ஆட்சியாளரால் அன்புடன் அளிக்கப்பட்ட  நறுமண பொருட்களையும் தங்கம் வைரம் போன்ற விலைமதிப்பில்லா பொருள்களை கப்பல் முழுவதும் நிரப்பிக் கொண்டு மிகுந்த ஆனந்தமாக சென்றார் வாஸ்கோடா காமா.  இது ஒருசாராரால் கூறப்படும் வரலாறு.

பல இன்னல்களை கடந்து கோழிக்கோட்டை அடைந்த காமா ஆட்சியாளரால் இன்முகமாகவே வரவேற்கப்பட்டாலும் அங்கு வணிகம் செய்து வந்த அரேபியர்களால் விரட்டப்பட்டார் எனவும் விரும்பிய பரிசு பொருள்களை கொண்டு வராததால் சாமரின் பகுதியின் ஆட்சியாளராலும் பின்னர் வெறுக்கப்பட்டார்.  அங்கு வாணிபம் செய்யவும் காமா அனுமதிக்கப்படவில்லை.  பல எதிர்ப்புகளுக்கிடையில் நறுமண பொருள்களையும் தனித்துவமாக இங்கு மட்டுமே கிடைக்கும் மயிலிறகு, நவரத்தின கற்கள் போன்ற பொருள்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு போர்ச்சுக்கல் கிளம்பினார் காமா.  அவர் செல்லும் வரை ஆட்சியாளர்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது.  சாமரின் ஆட்சியாளர்களின் ஆரம்ப காலகட்டத்திலேயே ஐரோப்பியர்கள் ஆதிக்கத்தை தடுக்க முயன்றனர் என்பது யாரும் அறிந்திடாத சிறப்பு.

இந்தியப் பெருங்கடலின் தளபதி:

போர்ச்சுக்கல்லுக்கு வெற்றியோடு திரும்பிய காமா வழியில் பெரிய சோதனையை சந்திக்க நேர்ந்தது.  அரேபியர்களால் மீண்டும் தாக்கப்பட்டார் காமா.  நான்கு கப்பல்களில் இரண்டு கப்பல்களோடும் 170 பயணிகளில் 55 பயணிகளோடு மட்டுமே அவரது நாட்டை அடைய முடிந்தது.  ஆனாலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு இந்தியப் பெருங்கடலின் தளபதி என்ற பட்டத்தையும் பெற்றார் காமா.

நறுமண பொருள்களுக்காக அடிமையான மாகாணம்:

முதலில் கோழிக்கோட்டை அடைந்த சாமரின் வேறு ஏதாவது பகுதியை அடைந்திருந்தால் காலணித்துவம் ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.  வாஸ்கோடா காமா கொண்டு சென்ற நறுமணப் பொருள்களால் கவரப்பட்டே ஐரோப்பியர்கள் ஒருங்கிணைக்கப்படாத இந்திய பகுதியில் வணிகம் செய்ய ஆசைப்பட்டனர்.  விரைவில் அவர்களின் ஆசை பேராசையாகவே மாறியது.  ஆம் ஒட்டுமொத்த பகுதியையும் கைப்பற்றி மொத்த வளங்களையும் சுரண்ட தொடங்கினர் ஐரோப்பியர்கள்.

ஆதிக்கப் போட்டிகள்:

போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், டேனியர்கள் இந்தியாவில் வணிகம் செய்ய வந்தனர்.  அவர்கள் வணிகத்தின் முக்கிய பொருளாக நறுமண பொருள்களே இருந்தன.  முதலில் ஒவ்வொரு மாகாணங்களிலும் வணிக தலங்களை நிறுவியவர்கள் கூடிய விரைவில் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட இடங்களாக அவற்றை மாற்றினர்.  வணிகம் செய்ய வந்தவர்கள் அவர்களுக்குள்ளேயே யார் பெரியவன் என்ற போட்டியுடனே செயல்பட்டனர்.

நறுமண பொருள்களுக்கான போட்டியில் டச்சுக்காரர்கள் இந்தோனேஷியாவில் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அம்பாயினா என்ற இடத்தில் 10 ஆங்கிலேயர் உள்பட 21 பேரை கொடூரமான முறையில் கொலை செய்தனர். ‘அம்பாயின படுகொலை’ ஆங்கிலேயரை மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவில் மாற வழிவகுத்தது.  

ஆங்கிலேயரின் தனித்துவமான எழுச்சி:

தந்திரமான செயல்களுக்கு சிறப்பு பெற்றவர்கள் ஆங்கிலேயர்கள்.  ஆசையைத் தூண்டி பிரித்தாளும் கொள்கை என்பது ஆங்கிலேயரின் மிகவும் பிரசித்தி பெற்ற கொள்கைகளுள் ஒன்று.  ஆங்கிலேயரை ஒன்றாக எதிர்ப்பவர்களிடையே பல விதமான சலுகைகளை முதலில் அளிப்பர்.  அதற்கு ஒத்து வருபவர்களிடம் அவர்கள் கூறியவற்றில் பாதியை அளித்து ஏமாற்றுவர்.  ஏமாற்றப்பட்டவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினால் அவர்கள் கொல்லப்படுவர் இல்லையெனில் நாடு கடத்தப்படுவர்.  சலுகைகளை ஏற்காமல் எதிர்ப்பவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டு அவர்கள் அடிமைப்படுத்தப்படுவர்.   இது போன்ற பல தந்திரமான செயல்பாடுகளால் ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவில் தனித்துவமாக சக்தியாக எழுச்சி பெற்றனர் ஆங்கிலேயர்கள்.