மூடும் நிலையில் பாம்பு பண்ணை... கண்டுகொள்ளுமா அரசு..?

சென்னை கிண்டியில் இயங்கிவரும்  பாம்பு பண்ணை கொரோனா தொற்றுக் காரணமாக  கடந்த ஒரு வருட காலமாக இயங்காத நிலையில் பராமரிக்க வருவாய் இன்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

மூடும் நிலையில் பாம்பு பண்ணை... கண்டுகொள்ளுமா அரசு..?
பாம்பு பண்ணை என்றாலே மக்கள் மத்தியில் உடனே சட்டென்று நினைவுக்கு வருவது, சென்னை கிண்டி பாம்பு பண்ணை தான், இந்த பாம்பு பண்ணை 1972-ஆம் ஆண்டு பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டேக்கர் தலைமையிலான இயற்கை ஆர்வலர் குழுவினால் உருவாக்கப்பட்டது. இது  சென்னை பாம்பு பண்ணை டிரஸ்டின் கீழ் இயங்கி வருகிறது.
 
தேசிய அளவில் பாம்புகளுக்கான சிறப்பு பெற்ற பாம்பு பண்ணையில் சுமார் 35 வகையான உயிரினங்களைக் கொண்டது.இங்கு பிரதானமாக பாம்புகள், முதலைகள், ஆமைகள் போன்ற இதர ஊர்வன வகைகள் அடங்கும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை 200-க்கும் மேற்பட்ட விலங்குகள் அடங்கும்.
 
இதனை கண்டு ரசிப்பதற்காக நாடும் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்து கண்டு ரசித்து சென்றனர். இங்கு வருவபவர்கள் நுழைவுக் கட்டணமாக செலுத்தும் பணத்தின் மூலமாக இதுவரை பாராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்நிலையில் கொரோனா தொற்று வீரியமடைந்தது. இதன் காரணமாக கடந்த  2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் பாம்பு பண்ணை மூடப்பட்டு வருவாய் இல்லாமல் இருந்து வருகிறது.
 
இதனையடுத்து சில தனியார் அமைப்புகள் அளித்த நிதியுதவியின் மூலம் அங்கு பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு ஊதியமும், விலங்குகளும் பராமரிக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக சிறிது காலமே திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா மறுபடியும் காலவரையின்றி  மூடப்பட்ட நிலையில் 80 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டு   நிதி பற்றாக்குறையினால் தவித்து வருகிறது.
 
கடந்த ஆண்டில் பெறப்பட்ட  நிதி உதவிகள் அனைத்தும் கடந்த  மே மாத இறுதியில் காலியான நிலையில் வரும் மாதங்களில் விலங்குகள் பராமரிப்பிற்கும் பணியாளர்கள் சம்பளத்திற்கு போதிய நிதியின்றி  மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,  இந்த பிரச்சனைக்கு தீர்வுக்காண தமிழக அரசு மற்றும் வன உயிரியல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களை போன்ற பாம்பு பண்ணை வைத்திருப்போர் களிடமும்  நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கிறார். சென்னை பாம்பு பண்ணை அறக்கட்டளை துணை இயக்குனர் கணேஷ்.
 
இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பிய போது, கிண்டி உயிரியல் பூங்கா உயிர்ப்புடன் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 
நிதி பற்றாக்குறையினால் தவித்து வரும் சென்னை கிண்டி பாம்பு பண்ணைக்கு அரசு உரிய கவனம் செலுத்தி சிறப்பு நிதியை அறிவித்து உயிரிபூட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.