நடிகை விஜயலட்சுமியால் மீண்டும் கைது செய்யப்படும் ஹரிநாடார்..!

என்று தான் சிறையிலிருந்து விடுதலை கிடைக்குமோ இந்த தங்க பறவைக்கு?

நடிகை விஜயலட்சுமியால் மீண்டும் கைது செய்யப்படும் ஹரிநாடார்..!

ஒரு சிலரின் பிரச்னை என்று தான் ஓயுமோ என்ற சந்தேகமும், சலிப்பும் நமக்கே ஏற்பட்டு விடும். அதேபோல தான் நடிகை விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சிக்கான முடிவும், இந்த ஹரி நாடார் சிறையில் இருப்பதற்கான முடிவும். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் தான் நடிகை விஜயலட்சுமி. திரையில் ஆடிப்பாடி படு சந்தோஷமாக இருக்கும் நடிகைகளின் நிஜ வாழ்க்கை அப்படியிருப்பது இல்லை. பல இளம் நடிகைகள்  எதிர்பாராத வண்ணம் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அப்படி தான் நடிகை விஜயலட்சுமியும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி தற்கொலைக்கு முயன்றார் விஜயலட்சுமி. பெங்களூருவில் தனது தாயுடன் வசித்து வந்த இவர், சாப்பாட்டுக்கே வழியில்லை எனவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தான் எனக்கு உதவ வேண்டும் எனவும் வீடியோ வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார் விஜயலட்சுமி. அடிக்கடி மற்றவர்கள் இவருக்கு உதவிக் கொண்டே இருக்க முடியாது என விஜயலட்சுமி மீது கோபப்பட்ட நடிகர்களும் இங்குண்டு. இவருக்கும் ஹரி நாடாருக்கும் என்ன இருக்கிறது? எதனால் விஜயலட்சுமியால் ஹரிநாடார் கைது செய்யப்படவுள்ளார் என்பது குறித்து பார்ப்போம்...

ஹரிநாடார் என்ற ஒருவரை நம்மால் மறக்கவே முடியாது. நடமாடும் நகைக்கடை என்றும் கூட இவரை நாம் கூறலாம். கிலோ கணக்கிலான தங்க நகைகளை அணிந்து கொண்டு தான் வெளியுலகில் வலம் வருவார் ஹரிநாடார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு அதிமுகவுக்கு, திமுகவுக்கு அடுத்த இடத்தை பிடித்து எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தவர்... அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுடன் எந்நேரமும் வலம் வந்து கொண்டிருப்பாரே, சாட்சாத் அவரேதான்..!சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார்... இன்னும் சொல்லப்போனால் நடிகை வனிதாவுடன் புது படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருந்தார் ஹரிநாடார். 2கே அழகானது காதல் என்றப் படத்தின் படபூஜையில், வனிதாவுடன் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மாஸ் காட்டினார் ஹரிநாடார்.  

இந்த ஜோடியை பார்த்து யார் கண்ணு வைத்தார்களோ தெரியவில்லை. இந்தப் படத்தின் பூஜை முடிந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டார் ஹரி நாடார். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் ஹரிநாடார் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். தொழிலதிபர்களுக்கு குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாக கூறி பெரிய கமிஷன் தொகையோடு எஸ்கேப் ஆகிவிடுவாராம் ஹரி நாடார். அதேபோல் தான் வெங்கட்ராமன் என்பவருக்கும் 360கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி 7.2கோடியை வாங்கி ஏமாற்றியுள்ளார் ஹரிநாடார். இது குறித்த புகாரின் பேரில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டு, பெங்களூரு அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இவர் பண மோசடி மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுவது போன்ற ரவுடிச வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி தான் நடிகை விஜயலட்சுமி-சீமான் பிரச்னையிலும் இவர் உள்ளே நுழைந்துள்ளார். சீமான் மீது குற்றம் சுமத்திய விஜயலட்சுமி, அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதனை ஒரு வீடியோவாகவும் பதிவு செய்தார் விஜயலட்சுமி. அந்த வீடியோவில் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த விஜயலட்சுமி, சீமானுக்கு ஆதரவு தெரிவித்து ஹரிநாடார் தனக்கு கொலை  மிரட்டல் விடுவதாகவும் கூறியிருந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அதில், உடல் நலம் சரியாகாத நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் எனவும் விஜயலட்சுமி வலியுறுத்தினார்..

அத்துடன், திருவான்மியூர் போலீசிலும் புகார் தந்தார். இந்த வழக்கை தூசிதட்டி எடுத்துள்ளனர் காவல்துறையினர்.  விஜயலட்சுமி உயிர் பிழைத்து கொண்டதால், அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் அந்த புகார் கிடப்பில் போட்டதாக கூறப்பட்டது.. இந்நிலையில், விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் ஹரி நாடாரை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முனைப்பு காட்டி வருகிறார்களாம்..இதற்காக, டிரான்சிட் வாரண்ட் வழங்க வேண்டும் என்று சென்னை திருவான்மியூர் போலீஸ் சார்பில் பெங்களூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.. வேறு ஒரு கேஸில், ஹரிநாடார் ஜெயிலில் இருப்பதால், பெங்களூர் கோர்ட் அனுமதி அளித்தவுடன் ஓரிரு நாட்களில் ஹரிநாடாரை கோர்ட்டில் திருவான்மியூர் போலீசார் ஆஜர்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூர் ஜெயிலில் விஐபி அந்தஸ்தில் இருந்தாலும், போலீசாரின் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளால் வெளியில் வர இயலாத நிலைக்கு ஆளாகி உள்ளார் ஹரிநாடார்..இதையடுத்து, எந்நேரமும் ஹரிநாடாரை போலீசார்கள் "தூக்க" வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. விஜயலட்சுமி அன்று மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலம் படுஸ்டிராங்காக இருப்பதாலும், 3வது குற்றவாளியாக ஹரிநாடார் பெயரும் சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்த வழக்கின் தீவிரம் அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது..!முன்பு குறிப்பிட்டதை போன்று எப்போது தான் முடிவுக்கு வருமோ இந்த விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சிக்கான தீர்வும்.. பந்தாவாக கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு வெளியே சுற்றித்திரிந்த ஹரிநாடார் என்ற கிளி எப்போது கூண்டிலிருந்து மீண்டும் வெளியே வருவாரோ....