ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி பல லட்சம் அபேஸ் பண்ண டுபாக்கூர் பெண் போலீஸ்!!

தமிழகத்தை சுற்றிலும் போலீஸ் உடையில் உலா வந்து பல பேரிடம் பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த பலே திருடியை போலீசார் மடக்கி பிடித்து சிறையில் அடைத்தனர்.

ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி பல லட்சம் அபேஸ் பண்ண டுபாக்கூர் பெண் போலீஸ்!!

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் ரோகினி. இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அவரது கணவர் சந்துருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ரோகினிக்கு அவரது நண்பர் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரோகினி தினேஷ் குமாரிடம், தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிவதாகவும் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டு வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் துறையில் குற்ற வழக்குகளில் சிக்கிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை குறைந்த விலையில் வாங்கி தருவதாகவும் தினேஷ் குமாரிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதையெல்லாம் உண்மை என நம்பிய தினேஷ்குமார், அவர் சொன்ன வாகனங்களை வாங்குவதற்காக ரோகினியை தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் ரோகினியோ இது தான்  நமக்கு அடித்த லக்கு என்று நினைத்து அவரிடம் இன்னோவா காருக்கு ரூ.7 லட்சம் மற்றொரு காருக்கு ரூ.7 லட்சம் என மொத்தம் 14 லட்சம் பணத்தை ஏமாற்றி வாங்கி தனது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தினேஷ்குமார் சென்னையை சேர்ந்த அவரது நண்பர் செந்தில் மற்றும் வேலூரை சேர்ந்த குமார் ஆகியோரை ரோகிணிக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அவர்களிடமும் தன் கைவரிசையை காட்டிய ரோகினி, இருவரிடமும் அதே டையலாக்கை கூறி தலைக்கு 5 லட்சம் என மொத்தம் 10 லட்சம் வரை பெற்றுக் கொண்டார். இப்படி வரிசையாக பொய்களை கூறி பணத்தை மட்டும் வாங்கிக்கிட்டு அவர்களுக்கு எந்த வாகனமும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல்  ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமாரும் அவரது நண்பர்களும் ரோகிணியை தொடர்பு கொண்டபோது, அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து தினேஷ் குமார் வேலூர் காவல் நிலையத்தில் கடந்த 25-ந் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தலைமறைவாக தங்கியிருந்த ரோகிணியை நேற்று போலீசார் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். அதன்பிறகு அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி கடந்த 2012-ம் ஆண்டு முதலே ரோகினி தான் ஒரு போலீஸ் என கூறிக்கொண்டு போலியான  சீருடையில் வலம்வந்து பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக  2012-ம் ஆண்டு வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களிலும் இதுவரை 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

இதேபோன்று தான் தற்போது தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் தனது கில்லாடி தனத்தை காட்டிய ரோகிணி அவர்களிடம் மட்டுமே கிட்டதட்ட 24 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதையெல்லாம் யாருடைய துணையும் இல்லாமலா ரோகிணி செய்திருப்பார் என்று சந்தேகித்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியபோது தான் மிகப்பெரிய டுவிஸ்டாக ரோகிணியின் கணவர் சந்துரு இந்த மோசடி வேலைக்கெல்லாம் உடந்தையாக இருந்துள்ளார், அவரது வங்கிக்கணக்கு மூலமாகத்தான் பல லட்சம் பணம் கைமாறி உள்ளது தெரியவந்தது. பிறகு பலே கில்லாடியான ரோகிணி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் ரோகிணிக்கு உறுதுணையாக இருந்த கணவர் சந்துருவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதனையடுத்து இந்த மோசடி வழக்கில் கைதான ரோகிணியிடன் ஏமாந்தவர்கள் யாரேனும் இருந்தால் தாராளமாக தங்களிடம் வந்து புகார் அளிக்கலாம் அதற்கான உரிய நடவடிக்கைகளை அவர் மீது எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.