சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட உயர்நீதி மன்றம் தடை... காரணம் என்ன..?

சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட உயர்நீதி மன்றம் தடை... காரணம் என்ன..?

சின்னத்திரையில் தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நாயகனாக வலம்வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து 100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டிய படம் டாக்டர் இந்தப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை உச்ச நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திவிட்டது.

இதனால் இவரின் அடுத்தடுத்த படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது. 

சுமார் ஐந்து படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்துள்ள சிவகார்த்திகேயன் அந்த ஐந்தில் ஒன்றான ஏலியன் காமெடி படமான அயலானில் ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து நடித்து முடித்திருந்தார்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் காமெடி கருத்து அனிமேஷன் என எல்லா அம்சங்களும் நிறைந்த முழு நீல மசாலா படமாக தயாராகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு படம் வெளிவரும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் பல படங்கள் கிறுஸ்துமஸை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதால் போட்டியை தவிர்க்கும் வகையில் அயலான் படம் தள்ளிப்போட பட்டது. 

ஆனால் இப்பொது ஒரு திடீர் சிக்கலாக  டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் என்பவர் அயலான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி கடனாக பெற்றிருந்த நிலையில் தற்போது வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி செலுத்தும் வரையில் 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் அயலான் படத்தை வெளியிடவோ,விநியோகம் செய்யவோ தடை விதிக்க கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அயலான் படத்தை வெளியிட 2022, ஜனவரி 3 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலால் ரசிகர்களும் படக்குழுவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மனுதாரர் தரப்போடு உள்ள பிரச்சனையை முடித்து கொள்வதும் மேற்கொண்டு இந்த வழக்கில் பதிலளித்து வழக்கை தொடர்வதும் படக்குழுவின் விருப்பம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தயாரிப்பாளர் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

முன்னதாக சிம்புவின் மாநாடு படத்திற்கு வந்தது போலவே அயலான் படத்திற்கும் அதே பிரச்சனை வந்துள்ளது எனவே படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழு தொடர்ந்து சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.