’காவலன் sos’ செயலில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்ன?

பெண்கள் நிச்சயம் பாதுகாப்புக்காக வைத்திருக்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள்..!

’காவலன் sos’ செயலில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்ன?

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. ஐடி கம்பேனிகளில் இரவு நேர பணிகள் முடிந்து வரும் போது பலர் கயவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாக ஆவதை நாம் செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதற்காகவே பேட்ரோல் எனப்படும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனையும் தாண்டி ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு ஆளானாலோ அல்லது ஆபத்தான சூழலில் மாட்டிக் கொண்டாலோ அவர்களை அங்கிருந்து மீட்க காவல்துறையினரால் உருவாக்கப்பட்டது தான் ’காவலன் sos’ என்ற செல்போன் செயலி. இதனை பெண்கள் தங்களது ஸ்மார்ட் செல்போனில் பதிவிறக்கம் செய்துக் கொண்டால், ஆபத்தின் போது இந்த செயலி மூலம் அருகாமையில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் செல்லும். அதன் பேரில் பெண்களை ஆபத்தில் இருந்து விரைந்து மீட்க பெரிதும் உதவியாக இருக்கும். இந்த செயலியில் என்ன என்ன பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். 

பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக இனி ’காவலன் sos’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தினார். இதில் தனி நபரின் பெயர் முகவரி, பெற்றோரின் விவரம், செல்போன் நம்பர் என அவர்களின் விவரங்கள் பெறப்படுகிறது. இச்செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்துவதன் வாயிலாக தங்களுடைய இருப்பிடம் ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக அறியப்பட்டு உடனடி சேவை வழங்கப்படும். இச்செயலியில் உள்ள 'ஷேக் டிரிக்கர்' வசதியை பயன்படுத்தியும் காவல் துறையின் உதவியை பெற இயலும். 

அவசர நேரம் மற்றும் ஆபத்தான நேரத்தில் உங்கள் பாதுகாப்பிற்கு காவல்துறையின் உதவி தேவைப்பட்டால் உடனே இந்த செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினாள் போதும். நீங்கள் பட்டனை அழுத்திய அடுத்த நொடியில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும். நீங்கள் இருக்கும் இடத்தின் ஜி.பி.எஸ் லொகேஷனும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும். சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வரும். பொதுமக்கள் 'KAVALAN SOS APP' செயலியைப் பயன்படுத்துமாறு காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த செயலியில் உங்களின் லைவ் லொகேஷன், ஜி.பி.எஸ். லைவ் ட்ராக்கிங், அழைப்பவரின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடம் கட்டுப்பாடு அறைக்கு அனுப்பப்படும், செயலியில் பதிவு செய்துள்ள உங்கள் குடும்பத்தினரின் எண்களுக்குத் தானாகவே மெசேஜ் அனுப்பப்படும் சேவை போன்று பல சேவைகள் உள்ளது.

பயனாளர்கள் தங்கள் விபரங்களை ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பிறகு செயலியை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது மூன்று நபர்களுக்குத் தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பெரிதும் பயன்படும் இந்த செயலியை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.