"அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளர் நான் தான்” ஒபிஎஸ் திட்டவட்டம்:

"அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளர் நான் தான்” ஒபிஎஸ் திட்டவட்டம்:

அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்த மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்-க்கு ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். அதில், தன்னை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேட் மூலமாக, இபிஎஸ்-க்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

பதில் கடிதம்:

அதற்கு பதிலளித்த இபிஎஸ், “அதிமுகவின் எயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இதனால், தங்களின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், காலாவதியாகி விட்டது. இனிமேல், நீங்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் கிடையாது” எனக் குறிப்பிட்டு பதில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரத்தில் பெரிதாக ஒபிஎஸ் எந்த விதமான மறுப்பு கடித்தையோ அல்லது செய்தியாளர்கள் மூலமாக விளக்கத்தையோ அளிக்கவில்லை. தொடர்ந்து மௌனம் காத்து வந்தார்.

பாஜக - அதிமுக கூட்டணி:

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் முர்மு வேட்புமனு தாக்கலின் போது கூட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் பங்கேற்றதாக கூறியிருந்தார் ஒபிஎஸ். அதன் பிறகு தன்னை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளர் என்பதை நிலைநாட்டுவதற்கான அரசியல் சூழல் ஒபிஎஸ்-இடம் ஏற்படவில்லை. இந்த பின்னணியில் தான் பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு தனக்கு ஆதரவு கோரி தமிழ்நாட்டிற்கு வந்தார். இதில், இபிஎஸ் - ஒபிஎஸ் இருவரும் தனித் தனி அறையில் இருந்து முர்முவை சந்தித்தனர்.

ஒபிஎஸ் இபிஎஸ் பிளவு:

அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில், விழா மேடைக்கு ஒபிஎஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவளர்கள் மட்டுமே விழா அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தனர்.

ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அறையில் மட்டுமே இருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வந்து பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் முர்முவிற்கு ஆதரவாக பேசவில்லை. தனி அறையில் மட்டும் முர்முவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ்:

இந்த பின்னணியில் தான் தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் தனது வீட்டிற்கு கிளம்பும் முன்னர் செய்தியாளர்கள் அவரிடம் வினாக்களை முன்வைத்தனர். அப்பொழுது பேசிய அவர், “இந்தியக் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கட்சியினுடைய வெற்றி வேட்பாளர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை ஆதரித்து, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய இதய பூர்வமான ஆதரவினை தெரிவித்திருக்கிறோம்” என்று கூறினார்.

“நான் தான் ஒருங்கிணைப்பாளர்”- ஒபிஎஸ் திட்டவட்டம்:

பின் பத்திரிக்கையாளர்களில் ஒருவர், “நீங்கள் இனி ஒருங்கிணைப்பாளர் அல்ல, ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதே எனக் கூறுவதற்கு உங்களது கருத்து என்ன?” எனக் கேட்டதற்கு, உடனடியாக பதிலளித்த ஒபிஎஸ், “கழக சட்ட விதிப்படி இன்று வரை நான் தான் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சிறிய புன்னகையுடன் கூறினார்.

அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பி, அங்கிருந்து வெளியேறினர்.