சூரியனுக்கே விண்கலம் விட்டாலும், சொந்த ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கல!!

சூரியனுக்கே விண்கலம் விட்டாலும், சொந்த ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கல!!

"ஏமாற்றுபவர் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்; ஏமாறுபவர் ஏமாந்துகொண்டே இருப்பார்" என்பதற்க்கு இணங்க, மக்கள் எப்பொழுதெல்லாம் தெற்கு ரயில்வேயின் உதவியை நாடுகிறர்களோ, அப்பொழுதெல்லாம் ஏமாற்றப்படுகிறர்கள். 

பெரும்பாலும், தமிழகத்தின் பல்வேறு ஊர் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். அவ்வாறு, சென்னையில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர் பக்கம் செல்ல விருப்பப்பட்டால், பணிச்சுமை போன்ற சில காரணங்களுக்காக அந்த ஆசை தள்ளிபோய்க்கொண்டே இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலம் வரும்பொழுது, அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

குடும்பத்துடன் ஊருக்கு சென்று சொந்தபந்தங்களுடன் நேரத்தை செலவழித்துவிட்டு, மீண்டும் சென்னை திரும்புவார்கள். இவ்வாறு, சென்று வருவதற்கு மக்கள் பெரும்பாலும் ரயில் சேவையையே நம்பியுள்ளனர். தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் ரயில்கள் சாதாரண நாட்களிலே பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. இந்த நிலைமையில், பண்டிகை காலங்களில் சொல்லவா வேண்டும். 

வருகின்ற 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று (13-09-2023), அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பே, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு தொடங்கியது. ரயில் நிலையங்களில் சென்றும், இணையத்தில் IRCTC தளத்திலும் முன்பதிவு செய்வதற்கு காத்திருந்தனர். இன்று காலை 8 மணியளவில் முன்பதிவு தொடங்கிய நிலையில், தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதிலும், குறைந்தது 150 பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கின்றனர். அது போக, போன்களில் முன்பதிவு செய்ய காத்திருந்தவர்களுக்கு, IRCTC தளம் ஒத்துழைக்காமல், காத்திருந்து காத்திருந்து காலம் போனதால், காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுள்ளனர்.

மக்களின் கூட்டத்தை சமாளிப்பதற்கு, பண்டிகை நாட்கள் நெருங்கும் பொழுது, சமாளிப்பிகேஷனுக்காக 2 அல்லது 3 ரயில்களை விட்டு, அதிலும் மக்கள் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்ய வழிவகுக்கிறது IRCTC தெற்கு ரயில்வே. இந்த அவலநிலையால், மக்களின் மனநிலை மாறுவதுடன், அந்த கூட்ட நெரிசலில் வாய்த்தகராறு மற்றும் சில சமயங்களில் கை கலப்பும் ஆகிவிடுகின்றது. 

இது போன்ற சம்பவங்கள் நடப்பது, முதல் முறையல்ல. பல வருடங்களாக மக்களுக்கு இத்தகைய ஏமாற்றத்தையே தெற்கு ரயில்வே பரிசளித்து வருகின்றது. இது போன்ற அவல நிலையை சரி செய்யாமல், வந்தே பாரத் போன்ற ரயில்களை இயக்குவதில் குறியாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையை தனதாக்கி, தனியார் பேருந்து நிறுவனங்கள் சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு விலையை உயர்த்தி கொள்ளையடிக்கின்றதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேறு வழியின்றி, அந்த கட்டணத்தை கட்டி ஊருக்கும் சென்று வருகின்றனர். 

IRCTC யின் இது போன்ற குறைபாடுகள் மற்றும் கொள்கைகள், தனியார் பேருந்துகளின் கட்டண வசூல் வேட்டைக்கு துணைபோகின்றதாக சமூக அக்கறையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க || மேட்ரிமோனி ஆப் மூலம் மோசடி; வாலிபர் கைது!