2024 ல் பாஜக வெற்றி பெற்றால்...என்னை சுட்டு கொல்லும்...திருமாவளவன் பேச்சு!

2024 ல் பாஜக வெற்றி பெற்றால்...என்னை சுட்டு கொல்லும்...திருமாவளவன் பேச்சு!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நான் சுட்டுக்கொல்ல படலாம் என விடுதலை சிறுத்தைகள்  கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்:

சென்னை நிரூபர்கள் சங்கத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கின் தீர்ப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் விசிக கட்சி தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், ”இன்று நமக்கு தலை நிமிர்வையும், தன்மானத்தையும் பெற்று தந்தது எதுவென்றால் சமூக நீதி என்ற கோட்பாடு தான், ஜனநாயகம் என்ற கோட்பாடு தான். ஆனால், இவையெல்லாத்தையும் ஒரே கோட்பாடாக தந்திருப்பது நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று கூறினார். 

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உண்மையான எதிரி யார்?:

தொடர்ந்து பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உண்மையான எதிரி யார்? என்பதை இப்போது சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளார். கேள்வி எழுப்பிய அவரே, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உண்மையான எதிரி காங்கிரஸோ, கம்யூனிஸ்டுகளோ, திமுகவோ கிடையாது. உண்மையான எதிரி யாரென்றால், நம்முடைய இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் என்று கூறியுள்ளார்.

கேள்வி கணைகளை வீசிய திருமாவளவன்:

ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய நோக்கமே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிய வேண்டும், இந்து ராஷ்டிரம் என இந்த நாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் சூட்டுவதற்கு தடையாக இருப்பது அரசியல் சாசனம் தான். அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் பெரும் சிக்கலாக இருக்கிறது என்று கூறினார். இதனால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நோக்கியே இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் அரசியல் சட்டத்தை மீறுகிறார்களா? என கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் கவுரி லங்கேஷை வீடு தேடிப் போய் படுகொலை செய்தனர். அவர் எந்த கட்சியும் கிடையாது. அதேபோல் பேராசிரியர் கல்புர்கியை வீடு தேடிப் போய் கொல்கிறார்கள். தபேல்கரை கொல்கிறார்கள். இவர்கள் என்ன அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களா? என்று சராமாரியாக கேள்வி கணைகளால் தாக்கி பேசினார்.

என்னை சுட்டுக்கொல்லலாம்:

தொடர்ந்து பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒரு இரவில் செல்லாது என்று அறிவித்து விடுவார்கள். அதேசமயம், மனுஸ்மிருதிதான் இந்த நாட்டின் சட்டம் என்பார்கள். அந்த சூழ்நிலையில், யார் யார் எந்தெந்த சிறைகளில் இருப்பார்களோ தெரியாது எனவும், ஒருவேளை திருமாவளவனாகிய என்னை கூட சுட்டுக்கொலை செய்யலாம் என தொல்.திருமாவளவன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com