”மக்களின் குரலைக் கேட்பதற்காகவே இந்த நடை பயணம் !!! ராகுல் காந்தி

”மக்களின் குரலைக் கேட்பதற்காகவே  இந்த நடை பயணம் !!! ராகுல் காந்தி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பாதயாத்திரையை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தொடங்கி வைத்தார்.

பாரத் ஜோடோ யாத்ரா:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை மேற்கொள்ள உள்ளார். பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரை நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

யார் யார் கலந்துகொள்கிறார்கள்?

கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாத யாத்திரை கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடைபெறுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் மூலம், ராகுல்காந்தி 3 ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தூரம் நடந்து காஷ்மீரை அடைய உள்ளார். இந்த பாதயாத்திரையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 

தந்தைக்கு மரியாதை:

இந்நிலையில், இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி, நேற்றிரவு விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்தார். அவரை, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் சென்றடைந்தார். 

மாநில முதலமைச்சர்கள்:

மாலை நடைபெறும் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து கன்னியாகுமரி முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கை கொடுக்குமா?

காங்கிரஸ் கட்சி கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் கட்சியின் மிக முத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தியின் செயல்பாடுகள் சரி இல்லை எனக் கூறி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் தனது பலத்தை இழந்து வருவதாக கூறப்பட்டது. இழந்த தனது பலத்தை மீண்டும் அடைய ராகுல் காந்தியின் இந்த பயணம் கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினரிடம் எழுந்துள்ளது.

ராகுல் காந்தி உரை:

இன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் மக்களின் நலனுக்காகவே காங்கிரஸ் செயல்படுகிறது என்று பேசியுள்ளார்.  அவற்றின் சில குறிப்புகளை காணலாம்.

தேசிய கொடி:

தேசிய கொடி, ஒவ்வொரு மாநிலத்தையும், ஒவ்வொருகுடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுகிறது. இந்த தேசிய கொடி, ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ சொந்தம் கிடையாது எனவும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சொந்தம் என ராகுல் பேசியுள்ளார்.  மேலும், இந்தியாவின் தேசிய கொடி, மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது எனவும் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பாஜக மீது விமர்சனம்:

அமலாக்கத்துறை, சி.பி.ஐ வருமான வரித்துறை போன்றவற்றைக் கொண்டு எதிர்கட்சிகளை பாஜக அச்சுறுத்துகிறது எனவும் எந்த ஒரு எதிர்கட்சி தலைவரையும், பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் ராகுல் கூறியுள்ளார்.

மொழியின் பெயராலும், இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் பாஜக பிரிக்கப்பார்க்கிறது, ஆனால், இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார் ராகுல்.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு- இது தான் மோடியின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது எனவும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு தொழிலாளர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறது பாஜக எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார் ராகுல்.

பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்:

பெரு நிறுவனங்கள் தான் இந்தியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது எனவும் நிலக்கரி, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், துறைமுகம் உள்ளிட்ட பெருமுதலாளிகள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனவும் பெருமுதலாளிகள் தான் மோடியைப் பாதுகாக்கின்றனர் எனவும் விமர்சித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, வேளாண்சட்டம் - இது போன்றவற்றை பெருமுதலாளிகள் தான் வடிவமைத்தார்கள் எனவும் கூறியுள்ளார் ராகுல்.

விலைவாசி ஏற்றம்:

சிறு குறு தொழிலாளர்களும், விவசாயிகளும் தான் இங்கு வேலைவாய்ப்புகளை உண்டாக்கினர், ஆனால், அவர்கள் தான் தற்போது வேலையின்றி திண்டாடி வருகின்றனர் எனவும் விலைவாசிகள் விஷம் போல ஏறிக்கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன்:

மக்களின் குரலைக் கேட்பதற்காகவே  இந்த நடை பயணம் எனவும் பாஜக ஆர்.எஸ்.எஸ் போல மக்களின் குரலை காங்கிரஸ் நசுக்கவில்லை எனவும் கூறியுள்ளார் ராகுல்.

இதையும் படிக்க: ”ஆடை அணியும் உரிமையில் ஆடைகளை அவிழ்க்கும் உரிமையும் அடங்கும்?” உச்சநீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கின் விவாதங்கள்!!!!