தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுகவினர்...!

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுகவினர்...!

சேலத்தில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர் ஒருவரை திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், காதில் இருந்து ரத்தம் வரும் அளவுக்கு தரம்கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்த நிகழ்வு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

தடையை மீறி கோவிலுக்குள் நுழைந்த இளைஞர் :

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று அம்மனை தரிசனம் செய்ய ஒரு தரப்பினர் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தடையை மீறி கோயிலுக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த இளைஞரை சூழ்ந்து கொண்ட ஊர்மக்கள் கடுமையான வார்த்கைளால் வருத்தெடுத்துள்ளனர். 

அப்போது, அங்கு நின்றிருந்த சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவர், பட்டியலின இளைஞரை பிடித்து வெளியே தள்ளி உள்ளார். அத்துடன் அந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையையும் காதில் இருந்து ரத்தம் வரும் அளவுக்கு தரமற்ற வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார்.

இதையும் படிக்க : எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்...கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...!

கொலை மிரட்டல் :

அதன் பிறகும் ஆவேசம் தணியாத அந்த திமுக நிர்வாகி, அங்கு நின்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்து, "இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாததை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ பாத்துக்கோ என கூச்சலிட்டுள்ளார். மேலும், எல்லாரையும் காலி பண்ணிடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இந்தக் கோயில் 18 பட்டிக்கும் பொதுவான கோயில் என யாரோ சொல்லிக் கொடுத்ததை அந்த இளைஞர் சொல்வதாக கூட்டத்தில் இருந்தவர் சொல்ல ஆவேசமான திமுக நிர்வாகி, உங்க அம்மாவும், அப்பாவும் கோயில் கட்ட பணம் கொடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பியதுடன், ஊருல எங்கேயும் நடமாட முடியாது என்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி உள்ளது. 

சமூக நீதி சர்ச்சைகளில் சிக்கி வரும் திமுகவினர் :

முன்னதாக, விழுப்புரத்தில் நடைபெற்ற நியாய விலைக் கடை கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, மேடையில் அமர்ந்திருந்த பட்டியல் இனத்தை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவரை பார்த்து “ஏம்மா, நீ எஸ்.சி. தானே” என கேட்ட நிகழ்வு பெரும் பேசு பொருளானது. இதேபோல், ஏற்கனவே சாதிப் பெயரை சொல்லி விமர்சித்ததால் தனது துறையை இழந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை சமூக நீதி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். 

இதுபுறம் ஒருக்க, மற்றொரு புறம் நாற்காலி கொண்டு வருவதற்கு தாமதமானதால் அமைச்சர் ஒருவர் கல்லை கொண்டு வீசுவது, மேடையில் தொண்டனை அடிப்பது என மறுபுறம் அராஜக அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் நாள்தோறும் சமூக நீதியை மேற்கொள்காட்டி பேசிவரும் திமுகவினர், மறுபுறம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை சாதி பெயரை சொல்லி சாதிய வன்மத்தோடு பேசும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.