1947-ல் என்ன போராட்டம் நடந்தது? கங்கனாவின் பேச்சால் மீண்டும் சர்ச்சை..!

பத்ம ஸ்ரீ விருதை திரும்ப பெற வலுக்கும் ஆதரவு..!

1947-ல் என்ன போராட்டம் நடந்தது? கங்கனாவின் பேச்சால் மீண்டும் சர்ச்சை..!

சமீப காலமாக அரசியல் குறித்தும், அரசியல் தலைவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருபவர் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். சாதனையாளர்களுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை சில தினங்களுக்கு முன்பு பெற்றார் கங்கனா. அவ்வப்போது இவர் போடும் ட்வீட் மற்றும் பேட்டியின் போது இவர் பேசும் கருத்துகள், இணையதளம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் தீ பிடித்து எரிந்து விடும். இவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவி படம் வெளியாகி ஹிட்டானது. இதில் மறைந்த ஜெயலலிதாவின் கதாபத்திரத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இழுத்திருந்தார் கங்கனா. 

கங்கனாவின் சர்ச்சைக்குறிய கருத்துகள் காரணமாக ட்விட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது.``தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் அலுவலகங்களுக்கு நடந்து செல்ல வேண்டும்" என்று அவர் கருத்து தெரிவித்திருந்தது, விவாதத்துக்குள்ளானது. இந்த நிலையில், கங்கனா ரணாவத் இந்தியா சுதந்தரம் பெற்றது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக கங்கனாவின் 24 விநாடிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பேசு பொருளானது. அந்த வீடியோவை பாஜக எம்.பியும் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில் கங்கனா, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது `நாடு உண்மையிலேயே 2014-ம் ஆண்டுதான் சுதந்திரம் அடைந்தது. 1947-ம் ஆண்டு கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா?" என்றும் பேசியிருந்தார். இதற்கு பலரும் தங்களது கண்டன குரல்களை எழுப்பியுள்ளனர். இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் வருண் காந்தி, கங்கனாவின் கருத்து தேசவிரோதச் செயல். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை இப்படி இழிவுபடுத்தக் கூடாது. அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்று கங்கனாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கங்கனா மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பிரீத்தி மேனன் புகாரும் அளித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், அவருக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி சர்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளை தாண்டி, சமூக ஆர்வலர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் என பலரும் கங்கனாவின் கருத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தனது கருத்திற்கு விளக்கம் அளித்துள்ளார் கங்கனா. அதாவது 1857ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ், ராணி லட்சுமி பாய் போன்றவர்களின் தியாகத்துடன் முதல் ஒருங்கிணைந்த சுதந்திரப் போராட்டம் நடந்ததாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி ஒரு போட்டோ ஒன்றையும் கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1857ம் ஆண்டு நடந்த போராட்டம் எனக்கு தெரியும். ஆனால் 1947-ம் ஆண்டு என்ன சுதந்திரப்போர் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அது குறித்து யாருக்காவது தெரிந்திருந்து எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப கொடுக்க தயாராக இருப்பதோடு, நான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். முதல் சுதந்திரப் போராட்டம் குறித்து முழுமையாக தேடிய போது, 1857ம் ஆண்டு நடந்ததாக தெரியவந்தது. எனவே தான் ராணி லட்சுமி பாய் படத்தை எடுத்தேன். வலது சாரியிடம் தேசியவாதம் ஓங்கி இருந்தது. ஆனால் திடீரென அவை ஏன் காணாமல் போனது. பகத் சிங்கை காந்தி ஏன் சாகவிட்டார். நேதாஜி ஏன் கொலை செய்யப்பட்டார். அவருக்கு காந்திஜி ஏன் ஆதரவு கொடுக்கவில்லை. வெள்ளையர்கள் ஏன் நாட்டை பிரித்தார்கள்? இதற்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். நான் தெரிவித்த கருத்துக்கான விளைவுகளை நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.