தமிழன்னாலே கெத்துதான்... நெஞ்சை நிமித்தி சொல்ல வைத்த கருணாநிதி!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்போம்..

தமிழன்னாலே கெத்துதான்... நெஞ்சை நிமித்தி சொல்ல வைத்த கருணாநிதி!!

என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே.. இந்த வார்த்தைகளை மீண்டும் கேட்கத் தூண்டினாலும், அதை கேட்க முடியாத சூழ்நிலையை தந்திருக்கிறது காலம். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்கிறார் கருணாநிதி எனும் காலப்பொக்கிஷம். தனது வாழ்நாளின் இறுதி வரையிலும் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் உழைத்து களைத்தவரை பூமித்தாய் தன் வசனம் அணைத்துக் கொண்டாள். சிறு வயது முதலே தீவிர போராட்ட குணம் படைத்திருந்த கருணாநிதி அவரது வாழ்நாளின் கடைசியான 94-வது வயது வரையிலும் மரணத்தோடும் போராட்டத்தை நிகழ்த்திச் சென்றார். 

1924-ம் ஆண்டு திருவாரூரை அடுத்த திருக்குவளை எனும் ஊரில் தட்சிணாமூர்த்தியாக பிறந்து வளர்ந்து, பின்னர் கருணாநிதியாக மக்கள் பணியாற்றத் தொடங்கியவர், எத்திசையிலும் உள்ள மக்களின் மனங்களை வென்ற பெருமைக்குரியவராக விளங்கினார் கருணாநிதி. சிந்தனையிலும், செயலிலும் மட்டுமல்லாமல் பேச்சிலும் கர்ஜிங்கும் சிங்கம் போலவே வாழ்ந்து முடித்தார் கருணாநிதி. கருணாநிதியின் அரசியல் பயணம் தொடங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் திராவிட நாடு இதழில் பிரசுரமான கருணாநிதியின் கவிதையின் மூலம் அண்ணாவின் அறி முகத்தைப் பெற்றார். அதோடு பெரியாரின் குடிஅரசு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றியபோது கருணாநிதி மேடை நாடகங்களையும் எழுதி வந்தார். 

அதன் கலனாக திரைப்பட வாய்ப்பு பெரியாரின் அனுமதியோடு வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த மந்திரி குமாரி படத்திற்கு வசனம் எழுதியது கருணாநிதிக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருந்தது. சினிமாவில் தோன்றும் கதாநாயகர்கள் சீரியக் கருத்துக்களை தாங்கிய போர் விமானமாக தெரிவதற்கு உதவியது. கருணாநிதியின் தீப்பறக்கும் வசனங்கள் திரைக்கு வெளியிலும் கருணாநிதியின் எதிரொலித்தது. அதன் காரணமாகவே கருணாநிதியின் மீது அண்ணாவுக்கு ஈர்ப்பு உண்டாக ஒரு காரணமாக அமைந்தது. கருணாநிதியின் கரகர குரலும், அடுக்கு மொழிப் பேச்சும், தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்தது. 

60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத பட்டியலில் இருக்கும் கருணாநிதிக்கு மக்கள் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு. கருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் தமிழ் சினிமாவின் வசனகர்த்தா இவராகத்தான் இருந்திருக்கக்கூடும். ஆனால் அதே நேரம் தமிழக அரசியலும், 50 வருடம் பின்னோக்கி போயிருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அண்ணாவின் அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியதற்கு கருணாநிதி எடுத்து வைத்த ஒவ்வொரு படிகளுமே கவனிக்கக்கூடியவையாக இருந்தது.  1938-ம் ஆண்டு நீதிக்கட்சியில் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 1942-ம் ஆண்டு தமிழ் மாணவர் மன்றம் என்ற இயக்கத்தை தொடங்கினார். இதுவே பிற்காலத்தில் தி. மு.க.வின் மாணவர் அமைப்பாக மாறியது. 1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி. மு.க. தொடங்கப்பட்டபோது அறிஞர் அண்ணாவுடன் இணைந்தார். 

1953-ம் ஆண்டு டால்மியாபுரம் என்று மாற்றப்பட்ட பெயரை எதிர்த்து புகழ்பெற்ற கல்லக்குடி என்ற பெயர் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார். ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்த அந்த போராட்டம்தான் கருணாநிதியின் அரசியல் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 3 மாதங்கள் சிறை தண்டனையைத் தொடர்ந்து வெளியே வந்தவர், 1957-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். அன்று முதல் கருணாநிதியின் வாழ்ககையில் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே அறிந்து வந்தார் அறிஞரின் தம்பி. கலைஞர். அதைத் தொடர்ந்து 1961-ம் ஆண்டு தி. மு.க. பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதற்கு மறு வருடமே, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவரானார். 

1967-ம் ஆண்டு தி. மு.க. முதன் முறையாக அரியணை கண்டபோது அண்ணாதுரையின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1969-ம் ஆண்டு அண்ணாவின் மறைவினையடுத்து தமிழகத்தின் முதல்வராக முதல் முறை பொறுப்பேற்றார். தமிழகத்தின் முதல்வராக அன்று பொறுப்பேற்ற கருணாநிதி, தமிழக வரலாற்றில் மாபெரும் சாதனையையே நிகழ்த்திக் காட்டினார். சமூக நீதி சார்ந்த அறப்போராட்டங்களை நடத்திய கருணாநிதி, ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், அவரது நினைவு முழுவதும் மக்கள் நலனிலேயே இருந்தது. தமிழக நலனுக்காகவே பிறந்து வளர்ந்து, தமிழகத்தை தரணியெங்கும் பறைசாற்ற காரணமாக இருந்தவர் கருணாநிதி.  இன்று அவரது திருவுடல் இல்லா விட்டாலும், திராவிட, பகுத்தறிவு கொள்கைகளினாலும், சீர்த்திருத்த செயல்களின் மூலம், என்றைக்கும் அழியாத தமிழ் போல வாழ்ந்து வருகிறார். தமிழர்கள் மனிதில் நீக்கமற நிறைந்து வாழ்கிறார் கருணாநிதி.