கார்கேவின் அரசியல் பயணமும் அவர் முன் உள்ள நான்கு முக்கிய சவால்களும்...!!!

கார்கேவின் அரசியல் பயணமும் அவர் முன் உள்ள நான்கு முக்கிய சவால்களும்...!!!

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்றுள்ளார்.  24 ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி குடும்பத்திற்கு வெளியில் இருந்து ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் கார்கே தனது சக போட்டியாளரான காங்கிரஸ் எம்பி சசி தரூரை தோற்கடித்தார். கார்கே 7,897 வாக்குகளும், தரூர் 1072 வாக்குகளும் பெற்றனர். கார்கே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸுடன் தொடர்புடையவர். மாணவர் சங்கத்தில் இருந்து தொழிற்சங்கம், அதன்பின் காங்கிரஸின் உயரிய பதவி வரை கார்கே பயணம் செய்துள்ளார்.

கார்கே குறித்தும் அவர் காங்கிரஸ் தலைவரானால் கட்சிக்கு என்ன பலன் என்பதைக் குறித்தும் தெரிந்து கொள்வோம்...
 
ஆரம்பக்கால வாழ்க்கை:

கர்நாடகாவில் பிறந்து , அரசுப் பள்ளியில் பயின்ற மல்லிகார்ஜுன் கார்கே, கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் உள்ள வரவட்டி பகுதியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.  தந்தையின் பெயர் மாபண்ணா கார்கே மற்றும் தாயின் பெயர் சபாவா.  கார்கே அவரது பள்ளிப் படிப்பை கர்நாடகாவின் குல்பர்காவில் உள்ள நூதன் வித்யாலயாவில் முடித்தார். அதன் பிறகு அங்குள்ள அரசு கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

கார்கேவிற்கு ஆரம்பம் முதலே அரசியலில் ஆர்வம் இருந்து வந்தது. கல்லூரியில் படிக்கும் போது மாணவர்களின் பிரச்னைகளுக்காக போராடி வந்தார் கார்கே. இதன் காரணமாக கல்லூரியின் மாணவர் சங்கப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கார்கே குடும்பம்:

கார்கே ராதாபாய் என்பவரை மணந்தார்.  இருவருக்கும் ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு மகள்களும் மூன்று மகன்களும் அடங்குவர்.  2006 இல், மல்லிகார்ஜுன் கார்கே அவரது மதத்தைப் பற்றி ஒரு பெரிய வெளிப்பாட்டை செய்தார். அதாவது அவர் பௌத்தத்தில் நம்பிக்கை கொண்டவர் என்று கூறியிருந்தார்.

தொழிலாளர்களுக்கான போராட்டம்:

குல்பர்காவிலுள்ள சேத் சங்கர்லால் லஹோட்டி சட்டக் கல்லூரியில் எல்எல்பி முடித்த பிறகு, கார்கே தொழிலாளர்களுக்காகப் போராடத் தொடங்கினார் . அதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடத் தொடங்கினார். 1969 ஆம் ஆண்டு MKS மீல்ஸ் ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகரானார்.  அதன் பிறகு  ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் கருதப்பட்டார். 
 
அரசியல் பங்கேற்பு:

அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட கார்கே 1969ல் காங்கிரசில் சேர்ந்தார். அவரது பெரும்பான்மை பலத்தைக் கண்டு, கட்சி அவரை குல்பர்கா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கியது. 1972 ஆம் ஆண்டு, முதல் முறையாக கர்நாடகாவின் குர்மித்கல் சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வானார் கார்கே.

குர்மித்கல் தொகுதியில் இருந்து தொடர்ந்து 9 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கார்கே. இந்த காலகட்டங்களில் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.  2005ல் கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2008 வரை இந்தப் பதவியில் இருந்த கார்கே 2009ல் முதல் முறையாக எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

காந்தி குடும்பத்தின் அன்பிற்குரியவர்:

கார்கே காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படுகிறார். இதற்காக அவ்வப்போது வெகுமதியும் பெற்றார். 2 014ல் கார்கே லோக்சபாவில் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  2019 லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பிறகும், காங்கிரஸ் கட்சி அவரை 2020ல் மாநிலங்களவைக்கு அனுப்பியது. குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தபோது, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக கார்கே நியமிக்கப்பட்டார்.
 

கார்கே முன் உள்ள சவால்கள் என்ன?:

காங்கிரஸுக்கு புதிய பலம் தேவைப்படும் நேரத்தில் கார்கே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், கார்கே பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார். 
 
1. காந்தி குடும்பத்தை சாராநிலை:

தற்போது காங்கிரஸ் கட்சி முழுமையாக காந்தி குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் எந்தப் பதவியில் இல்லையென்றாலும், அவர்கள் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. காந்தி குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்து காங்கிரசை பற்றி பேச முடியாது என்பது மிகப்பெரிய உண்மை.

அத்தகைய நேரத்தில், காந்தி குடும்பத்தின் எந்த அழுத்தமும் இல்லாமல், கட்சிக்கான முடிவுகளை கார்கே சுதந்திரமாக எடுக்க முடியுமா என்பதே கார்கேவின் முன் இருக்கும் மிகப்பெரிய முதல் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 

2. கட்சியில் பிளவை நிறுத்துதல்: 

ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையே சண்டை நடந்து வருகிறது. காங்கிரஸ்ஸின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கட்சியில் தொடரும் பிளவை தடுத்து நிறுத்துவது கார்கேவின் முன் உள்ள இரண்டாவது பெரிய சவாலாக இருக்கும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 

3. பொதுமக்களிடம் நம்பிக்கை பெறுதல்:

இந்த கட்சி தங்களுக்கு நல்லது என்று பொதுமக்களை நம்பவைத்தால்தான் மீண்டும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற முடியும். இதற்கு காங்கிரஸ் கட்சியில் புதியவர்களை சேர்க்க வேண்டும். இதுவும் கார்கேவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.

4. சட்டமன்றம் மற்றும் பொதுத் தேர்தல்:

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. அதன்பிறகு குஜராத்திலும் தேர்தல் நடைபெறவுள்ளது. 2023ல் பத்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கர்நாடகாவும் அடங்கும்.  கார்கே பிறந்த மாநிலம் கர்நாடகம்.  2024ல் ஏழு மாநிலங்களில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்கள் நடைபெறும். இந்தத் தேர்தல்களில் சிறப்பாகச் செயல்படுவதே கார்கே முன் வைக்கப்பட்டுள்ள மிகவும் பெரிய சவாலாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”இதுபோன்ற சுதந்திரம் பாகிஸ்தானில் இல்லை...” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல்!!!