ராஜாக்கள் மந்திரியாகின்றனர்- புதிய அமைச்சர்கள் பட்டியல்...!

ராஜாக்கள் மந்திரியாகின்றனர்- புதிய அமைச்சர்கள் பட்டியல்...!

திமுக தலைமையிலான ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தனது அமைச்சரவையை மாற்றியமைப்பது வழக்கம்.  ஆனால் திமுக ஆட்சியை பொறுத்தமட்டில் பெரிதாக மாற்றமிருக்காது, ஆனால் கடந்த 2ஆண்டுகளில் இரு முறை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வார்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கவனத்துடன் செயல்படுங்கள் என பல முறை முதலமைச்சர் எச்சரித்தும் நித்தம் ஒரு பிரச்சனை எழும் சூழலில் கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 2ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி  முதல் பணியாக சுழற்சி முறையில் அமைச்சர்களை மாற்றியமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

வாய்ப்பு:

டெல்டா மாவட்டத்தை பொறுத்தமட்டில் அமைச்சர்கள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பிய போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’நான் டெல்டாக்காரன்’ என்று கூறினார். இருந்தாலும் அந்த மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் வேண்டும் என்ற கட்டாயம் தற்போது எழுந்துள்ளதால். மூன்று முறை மன்னார்குடியில் இருந்து தேர்வான முனைவர் டி.ஆர்.பி. ராஜா அமைச்சரவை இடம் பிடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டமன்ற திட்டக்குழுவிலும் மற்றும் மதிப்பீட்டு குழு தலைவராவும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும்  தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவில் உள்ள சாக்கோட்டை அன்பழகனும் இந்த ரேசில் உள்ளார். மேலும் தென்மாவட்டத்தை பொறுத்தமட்டில்  சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினரான ராஜாவுக்கும் அமைச்சரையில் இடம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ஆதி திராவிடர் நலத்துறை இவருக்கு வழங்கப்படும் பட்சத்தில் அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சராக கீதா ஜீவன் இருப்பார் என்பதால் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த தற்போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள தமிழரசி ரவிக்குமாரும் இந்த ரேசில் உள்ளார்.

பறிப்பு:

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக உள்ள கயல்விழி செல்வராஜ் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே வேளையில் வெகுநாட்களாக மனகசப்பில் இருந்த ஐ.பெரியசாமிக்கு  கடந்த அமைச்சரவை மாற்றியமைப்பில் ஊரக வளர்ச்சித்துறை வழங்கப்பட்டது இந்நிலையில் அவருக்கு கூடுதல் இலாக்காக்கள் வழங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் முதலமைச்சரின் குட்-புக்கில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

துணை முதலமைச்சர்:

முன்னாள் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது, கடந்த திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதுதான் துணை முதலமைச்சர் என்ற புதிய பதவி, பின் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அப்பதவி யாருக்கும் வழங்கவில்லை, பின் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக பதவி வகித்தார். அப்பதவி மீண்டும் கொண்டு வரப்பட்டு துரை முருகன் மற்றும் உதயநிதி உள்ளிட்ட இருவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு கடைசியில் அப்பதவி மீண்டும் கொண்டு வரவேண்டாம் என்று கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.