ஊழல் செய்து வாங்கப்பட்டதா ராமர் கோவில் நிலம்? ராமர் கோவில் பெயரில் நில மோசடி அம்பலம்…

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வளாகத்திற்கு நிலம் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊழல் செய்து வாங்கப்பட்டதா ராமர் கோவில் நிலம்?  ராமர் கோவில் பெயரில் நில மோசடி அம்பலம்…

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வளாகத்திற்கு நிலம் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டுவதற்காக ராமர் கோயில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, 70 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் பொதுமக்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமர் கோயில் வளாகத்துக்கு நிலம் வாங்கியதில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் பவன் பாண்டே ஆகியோர், ராமர் கோயில் அறக்கட்டளையானது கோயிலுக்கு 2 கோடி மதிப்புள்ள இடத்தை 18.5 கோடிக்கு வாங்கி மோசடி செய்துள்ளதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர். தனிநபரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த நிலத்தை, சில நிமிடங்களிலேயே அறக்கட்டளை நிர்வாகம் 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

மேலும் அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆவணத்தில், 1.208 ஹெக்டேர் நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர் குசும் பதக் என்பவரிடம் இருந்து கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி 2 கோடிக்கு வாங்கி பத்தே நிமிட இடைவெளியில் அதே நிலத்தை 18.5 கோடிக்கு சுல்தான் அன்சாரி என்பவர் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றிருக்கிறார் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை அறக்கட்டளை நிர்வாகிகள் மறுத்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராமர் கோயில் நில மோசடி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.