உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் மாறுமா...?

உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் மாறுமா...?

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் . 

வெள்ளி விழா நிகழ்ச்சி:

சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் சேர்ந்து, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ,தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் அருண் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்:

வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஸ்டாலின், மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை வெளியிட்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மனித மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருப்போம் எனவும், அரசியல் அமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையே மனித உரிமை தான் எனவும் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் திமுக அரசு சட்டத்தின் அரசாக, சமூக நீதியின் அரசாக செயல்பட்டு வருகிறது எனவும், மனித உரிமைகள் ஆணையத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர தமிழக அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார். 

வழக்காடு மொழியாக தமிழை சேர்க்க வேண்டும்:

மேலும், நீதித்துறைக்கான உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, ”சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை சேர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டரி ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது. 

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வரும் நிலையில், கடந்த மே மாதம் 12 ஆம் தேதி இது  தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தது குறிப்பிடதக்கது. இதற்கும் முன்னர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் கடந்த 23-4-2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், இது குறித்து கோரிக்கை வைத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை சேர்க்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்கபடுமா? வருங்காலத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...