பொதுப்பணித்துறையில் மெகா ஊழல்: ஆதாரங்கள் அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!  

தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தில், அலுவலக கணினியில் இருந்த முக்கிய கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பொதுப்பணித்துறை உயரதிகாரிகளிடம் துறை ரீதியிலான விசாரணை? நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பொதுப்பணித்துறையில் மெகா ஊழல்: ஆதாரங்கள் அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!   

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க முன்னாள்  அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி ஆகியோர்  தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி பல லட்சம் ரொக்கம், பல முக்கிய ஆவணங்களை  பறிமுதல் செய்தனர். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி பொதுப்பணிதுறை அலுவலகத்தில் இருக்கக்கூடிய 8 கணினிகளின் ஹார்டிஸ்க் அழிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த கணினியில் கடந்த ஆட்சி காலத்தின்போது தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரங்கள் மற்றும் சீரமைப்பு செய்யப்பட்ட கட்டிட விவரங்கள் என பல முக்கிய கோப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் பொதுப்பணித் துறையின் இணை தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் கோப்புகளை அழித்தது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இணை தலைமை பொறியாளராக இருக்கக்கூடியவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நபர் எனவும், கடந்த ஆட்சியின் போது பொதுப்பணித் துறை சார்பில் டெண்டர் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் கவனித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணி துறை அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாகக் கூறி சீரமைப்பு பணியின் போது 8 கணினியில் இருந்த முக்கிய கோப்புகளை இவர்கள் அழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக இணை தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளரை வேலூர் மற்றும் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்து பொதுப்பணி துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளன.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழலை வெளிகொண்டு வர தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், பொதுப்பணி துறைக்கு சம்பந்தமான முக்கிய கோப்புகள் அழிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊழலில் ஈடுபட்ட ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளனரா? இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சரின் தலையீடு உள்ளதா? என குற்றச்சாட்டில் சம்மந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.