திமுகவிலும் உட்கட்சி பூசலா?அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல்!

திமுகவிலும் உட்கட்சி பூசலா?அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல்!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களுக்கும், எம்.பி. திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது. ஒரே கட்சியில் இருந்தபோதும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது ஏன்?

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், தி.மு.க.வின் முக்கியத் தலைவராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா பா.ஜ.க.வுக்கு சென்று மீண்டும் தி.மு.க.வில் இணைந்தபோதும் சிவாவுக்கு கட்சியில் கூடுதல் மகத்துவம் உண்டு. இப்படியிருக்க திருச்சி சிவாவின் தரப்புக்கும், தி.மு.க.வின் முக்கிய தூணாக விளங்கும் கே.என்.நேருவின் தரப்புக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் டென்னிஸ் மைதானம் ஒன்று கட்டப்பட்டு திறப்பு விழா நடந்து முடிந்தது. இந்த டென்னிஸ் அரங்கத்தை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பதாக முன்னரே முடிவெடுக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவுக்கான பத்திரிக்கை ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட நிலையில் அதில் திருச்சி சிவா-வின் பெயர் இடம் பெறாமல் இருந்ததுதான் ஆரம்பப் புள்ளி.. இதையடுத்து டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழாவுக்கு சென்ற தி.மு.க.வினர் அங்கு வடிக்கப்பட்டிருந்த கல்வெட்டை பார்த்ததும் அதிர்ந்து போயினர். 

பத்திரிக்கையில் இல்லையென்றால் சரி, கல்வெட்டில் கூட திருச்சி சிவா பெயர் இடம் பெறவில்லையே என ஆத்திரமடைந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் இதுகுறித்து கேட்டு விட முடிவெடுத்தனர். உடனே கே.என்.நேருவின் காரை வழிமறித்து கறுப்புக் கொடி காட்டி அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். 

இதனைக் கண்ட கே.என்.நேரு சமாளிக்க முடியாமல் காரில் ஏறி சென்றபோதும், நேருவின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அது எப்படி காரை வழிமறித்து கேள்வி எழுப்பலாம் என நினைத்தவர்கள், ஓடோடிச் சென்று திருச்சி சிவாவின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கல்லை விட்டெறிந்தனர். 

அதோடு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேர்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர். கே.என்.நேருவின் காரை வழிமறித்து வாக்குவாதம் செய்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தி.மு.க.வுக்குள் உட்கட்சிப் பூசல் தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே தியாகராஜன் கடும் கண்டங்களை விடுத்துள்ளார். 

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற வார்த்தை புழக்கத்தில் இருந்து வந்தாலும், பேருக்காக வெளியே எதிர்ப்பவர்கள் கூட மறைமுகமாக நண்பர்களாக இருப்பதுண்டு. ஆனால் பெயருக்காக உட்கட்சியிலேயே அடித்துக் கொண்ட இந்த சம்பவம் தமிழக அரசியலுக்கு கொஞ்சம் புதிதுதான்..

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com