நாங்குநேரி சம்பவம்: "நான்கு அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போய்ட்டாங்க"...நடந்தது என்ன?

நாங்குநேரி சம்பவம்: "நான்கு அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போய்ட்டாங்க"...நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெருந்தெருவில் வசித்து வருபவர்கள் முனியாண்டி - அம்பிகா தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற மகளும் உள்ளனர்.

வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இருவரும் படித்து வருகின்றனர். பொதுவாக சின்னதுரை நன்கு படிக்கும் மாணவராக திகழ்ந்துள்ளார். இதனாலயே அவரது ஆசிரியர்கள் அனைவரும் சின்ன துரையை எடுத்துக்காட்டி, சக மாணவர்களை நன்கு படிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் சக மாணவர்களுக்கும், சின்னதுரைக்கும் இடையே சில நாட்களாக தகராறு எழுந்து வந்துள்ளது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், சின்னதுரை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவன் என்பதே. இதனால், ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர், சின்னதுரையை கடைக்கு அனுப்புவது, தங்கள் வேலைகளை செய்யச் சொல்வது என வேறுபாட்டுடன் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கம் போல், ஆகஸ்ட் 9-ம் தேதியன்று சக மாணவர்கள் 3 பேர், சின்னதுரையை அழைத்து, பிரச்சனை செய்துள்ளனர். இதனை விரும்பாத சின்னதுரை, அவர்களிடமிருந்து நகர்ந்து வீடு திரும்பியுள்ளார். சின்னதுரையின் செயலை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், 10-ம் தேதியன்று சின்னதுரையை வீடு புகுந்து அரிவாளால் சராமரியாக வெட்டியுள்ளனர். இதைக் கண்டு திடுக்கிட்டுப் போன 14 வயது சிறுமியான சந்திரா செல்வி, தன் அண்ணனை காப்பாற்றுவதற்காக, கொலைவெறி தாக்குதல் நடத்திய மாணவர்களை தடுக்கும் பொழுது, சிறுமி என்றும் பாராமல், சந்திரா செல்வியையும் வெட்டியுள்ளார்.

இதையும் படிக்க || நாங்குனேரியில் மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவத்தில் திமுக செயலாளர் உறவினர் உட்பட 6 பேர் கைது..!

இருவரது அலறல் சத்தத்தையும் கேட்டு ஓடி வந்த அவரது தாத்தா கிருஷ்ணன் (59), தனது பேரன் பேத்தியின் நிலைமையை கண்கொண்டு திடுக்கிட்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அப்பொழுது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு வந்ததில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த கோர சம்பவத்தின் முடிவில், பாதிக்கப்பட்டு துடித்துக்கொண்டிருந்த இருவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சாதிப் பிரச்சினையில் சிறுவனை வெட்டிவிட்டு தப்பியோடிய மாணவர்களில் ஒருவர், திமுக ஒன்றிய செயலரின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது. பின்பு 6 போரையும் கைது செய்து சிறுவர் சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளான மாணவன் மீதான வன்முறை சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பரவிய நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தம்பி சின்னதுரை விரைவில் குணமடைய வேண்டுவதாகவும், சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று ஒரு ட்வீட் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அரசியல் வட்டங்களும், பிரபலங்களும் தங்கள் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க || நாங்குனேரி சம்பவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட் ..!

இது குறித்து மாணிக்கம் தாகூர் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் " நாங்குநேரி சம்பவம் கேள்விபட்டதில் இருந்து மனம் பதைபதைக்கிறது. மாணவச் சமுதாயம் தான் நாளைய இந்தியா எனும் சொல்லும் வேளையில் இது போன்று சாதி நஞ்சு அவர்களின் மனத்தில் கலந்தது வேதனைக்குரியது.சிறுமி தனது வாக்குமூலத்தில் 4 அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போயிட்டாங்க என கூறும்போது ஒரு நொடி என் இதயம் நின்றே விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி உடனடியாக கிடைக்க வேண்டும்; மாணவர் சின்னத்துரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிப்புக்குள்ளான மாணவனின் தாயாரிடம், ஆதிதிராவிடர் நலத்துறை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண தொகையில், முதல் கட்டமாக 1,92,500 வழங்கியுள்ளது.

சமூகத்தில் பிரிவினையால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு லட்ச ரூபாய் நிவாரநாத் தொகை தீர்வாகும் என்றால், என்று தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கேள்வி எழுப்பி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதையும் படிக்க || நாங்குநேரி சம்பவம்: "மாணவர்களிடையேயான வேறுபாடு, வன்முறையாக மாறியது சகிக்க முடியாத ஒன்று" முதலமைச்சர் கண்டனம்!!