கோயம்புத்தூர் பறந்த தேசிய புலனாய்வு முகமை...விவரம் இதோ!

கோயம்புத்தூர் பறந்த தேசிய புலனாய்வு முகமை...விவரம் இதோ!

கோவை கார் வெடித்து சிதறிய விபத்து தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர்.

கோவை கார் விபத்து:

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காருக்குள் சிலிண்டர் வெடித்து சிதறியதில், அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த நபரின் வீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையினர் ஆய்வு நடத்தியுள்ளதாகவும், தற்போது தனிப்படை நடத்திய சோதனையில் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல்:

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை உக்கடத்தில் நடைபெற்றது தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் என்ற பகீர் தகவலை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜமேஷா முபினின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பாணியில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். 

தமிழ்நாடு டிஜிபியிடம் அண்ணாமலை கேள்வி:

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரின் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அவர்கள் எந்த பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து தமிழ்நாடு டிஜிபி கூறாது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி, கோவை சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன்...என்ன சொன்னார்?

அண்ணாமலைக்கு பதிலளித்த காவல் ஆணையர்:

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து  கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை உக்கடம் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டு சதிக்கான 120 பி, இரண்டு பிரிவினிரிடையே மோதலை உண்டாக்கும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையர் விளக்கம் அளித்தார்.

கோயம்புத்தூர் பறந்த தேசிய புலனாய்வு முகமை:

இந்நிலையில், கோயம்புத்தூர் காரில் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர். கோவை கார் வெடித்து சிதறிய வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியதை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு  தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்துவதற்கு முகாந்திரம் உள்ள வழக்காக கருதப்பட்டுள்ளது.

அதன்படி,  வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக முதற்கட்ட கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று இரவு விமான மூலம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர். இன்று காலை முதல் தங்களுடைய  விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்கூட்டியே கோவை பறந்த என்ஐஏ:

வழக்கமாக, முதலில் தமிழக காவல்துறையிடம் உள்ள வழக்குகள் முறையாக ஆவணங்கள் மற்றும் தடவியல் அறிக்கை உள்ளிட்ட மொத்த கோப்புகளுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து தேசிய புலனாய்வின் முகமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன்பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கும்.  ஆனால், கோவை உக்கடம் வழக்கில்  முன்னதாகவே கள ஆய்வு மேற்கொள்ள தேசிய புலனாய்வு  அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்கிற அடிப்படையில் கோயம்புத்தூர் விரைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.