"ஆபாசம் வேறு, நிர்வாணம் வேறு": கேரள நீதிமன்றத்தின் சிந்திக்க வைக்கும் தீர்ப்பு!

"ஆபாசம் வேறு, நிர்வாணம் வேறு": கேரள நீதிமன்றத்தின் சிந்திக்க வைக்கும் தீர்ப்பு!

கேரளா: பெண்களின் நிர்வாணம் ஆபாசம் இல்லையென கேரள நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தற்போதய சூழல்களில் ஆடைகள், நிர்வாணம் மற்றும் ஆபாசம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. அதாவது, பெண்கள் ஆடை அணிவதில் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள், முன்பிலிருந்தே இருந்து வருகின்றது. நிர்வாணம் எப்பொழுது ஆபாசமாக மாறுகிறது என்பதில் பலருக்கும் பல கருத்துக்கண்ணோட்டம் உள்ளது.

19ம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவிதாங்கூர் சமஸ்தானம், சேர்த்தலை என்னும் பகுதியில் வாழ்ந்த நங்கேலி  என்னும் பெண், அவர் சாதியின் அடிப்படையில் அக்காலத்தில் விதிக்கப்பட்டிருந்த முலைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினர். நங்கேலி தனது மார்பகங்களை வெட்டி, வரி வசூலிக்க வந்த அதிகாரியிடம் கொடுத்தார். அவரின், வீரச் செயலை  முன்னிறுத்தி மக்கள் இயக்கங்கள் தொடங்கப்பட்டு அந்த வரி வசூலிப்பதற்கு எதிர்ப்புகள் எழும்பின. இதன் பின்னணி என்னவென்றால், தனது உடல் சார்ந்த முடிவுகளை எடுப்பது தனது உரிமையாகும் என்பதே. 

இந்த வகையில், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரிஹானா பாத்திமா, தனது மேலாடையற்ற உடலில், தனது குழந்தைகள் ஓவியம் வரைவதை, காணொளியாக பதிவு செய்து, அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 
அந்த காணொளி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிஹானாவின் இச்செயலை பலரும் எதிர்த்தனர். அதேவேளையில், பலரும் ஆதரிக்கவும் செய்தனர். இச்செயல், ஆடை கட்டுப்பாடுகள் குறித்த விமர்சனங்களுக்கு, பதிலடி கொடுப்பதாக,  ஆதரிப்பவர்கள் கருதினார்கள். 

இச்சம்பவத்தில், ரிஹானா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை. கேரள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், சமூகத்தை சிந்திக்க வைக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி கவுசர். ஆண்கள் மேலாடை அணியவில்லை என்றால் அது ஆபாசமாக தெரியவில்லை. அதுபோல், பெண்களின் நிர்வாணம் எப்பொழுதுமே ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் ஆகாது, எனத் தெரிவித்தார். 

மேலும், ஒரு பெண் தனது உடல் குறித்து சுயமாக முடிவு எடுக்க, அவருக்கு மட்டுமே உரிமை உள்ளதாக கூறி, ரிஹானா மீது தொடரப்பட்ட இவ்வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி கவுசர்.

"ஆபாசம் வேறு, நிர்வாணம் வேறு" என்னும் இந்த தீர்ப்பு, இனிவரும் காலங்களில், பெண்களின் ஆடை குறித்த கருத்துகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையக்கூடும்.

இதையும் படிக்க: விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; காதலன் கொலை!