வெளியே வந்த ராஜேந்திரபாலாஜியிடம் பேச மறுக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்..!

ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

வெளியே வந்த ராஜேந்திரபாலாஜியிடம் பேச மறுக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி அவரது கட்சி தலையிடமே எந்த ஒரு இடத்திலும் ஏன் வாய்திறக்கவில்லை என்ற சந்தேகம் அனைவர் மத்தியில் உள்ளது. வருமான வரித்துறையினர் அதிமுக முன்னாள் அமைச்ச்ரகளின் வீடுகளில் ரெய்டு நடத்திய போது, திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு செய்வதாக முன்னாள் அமைச்சர்களுக்கு வக்காலத்து வாங்கிய அதிமுக தலைமை, ராஜேந்திரபாலாஜியின் குற்றச்சாட்டுக்கும் சரி, அவர் கைது செய்யப்பட்டதற்கும் சரி ஏன் எவ்வித வக்காலத்தும் வாங்க வரவில்லை? கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அமைச்சராக இருந்த போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமின்றி பண்டிகையின் போது ஆவினில் இருந்து டன் கணக்கில் சுவீட்ஸ்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் இவர் மீது புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடிய ராஜேந்திரபாலிஜிக்கு முன் ஜாமீன் கிடைக்காததால் அங்கிருந்து அப்படியே தலைமறைவானார். 

அவரை பிடிக்க 8-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளி எனவும் அறிவிக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. அதன் பிறகு கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவரை, கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் காரில் வலம் வந்த ராஜேந்திரபாலாஜியை நட்ட நடு சாலையில் சுற்றிவளைத்து கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்திலும் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் அவரது வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே அவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதை அடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் நிர்வாகக் காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், ஒரு வாரம் சிறையில் இருந்தவர் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அதிமுகவில் தலைமைக்கு எதிராக கருத்து கூறினாலாயே, கட்சியின் பெயருக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி தூக்கிய நிலையில், உண்மையாகவே மோசடி வழக்கில் சிறை சென்று கட்சியின் பெயருக்கு குந்தகம் ஏற்படுத்திய ராஜேந்திர பாலாஜி மீது எவ்வித நடவடிக்கையும், கண்டனமும் பதிவு செய்யவில்லை அதிமுக தலைமை. 

அதுமட்டுமின்றி ஒருவாரக் காலம் சிறையில் இருந்த அவரை அதிமுக முக்கியப் புள்ளிகள் யாரும் சென்று சந்திக்கவில்லை. அவ்வளவு ஏன், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தவரையும் யாரும் சென்று சந்திக்கவில்லையாம். சிறைவாசலில் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் வரவேற்றதை அடுத்து, மிகவும் அமைதியாக நேராக திருச்சியில் தனியார் ஹோட்டலுக்கு சென்றார். ரூமுக்கு சென்ற அவர், முதல் வேலையாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்-க்கும் தான் போன் செய்தாராம். ஆனால் இருவருமே அவரிடம் பேசவில்லையாம். மீண்டும் இதனால் வருத்தமான ராஜேந்திரபாலாஜி சில மணி நேரங்களில் காரில் விருதுநகருக்குக் கிளம்பினார். சிவகாசி சென்று திருத்தங்கலில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். அப்போது உறவினர்கள் அவரிடம், போலீஸார் விசாரணை என்ற பெயரில் என்னென்ன செய்தார்கள் என்பதை அவரிடம் எடுத்துக் கூறினார்கள். சில அதிமுக நிர்வாகிகளும் அவரை வீடு தேடி வந்து சந்தித்துள்ளார்கள். 

வீட்டிற்கு சென்ற பின்பும் கூட, இருவருக்கும் போன் செய்து இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. ஆனால், ’ பேசுறேன் சொன்னாரு, அவரே உங்க லயன்ல வர்றாருனு சொன்னாரு’ என்பன போன்ற பதில்கள் ராஜேந்திரபாலாஜிக்கு சொல்லப்பட்டதே தவிர ஒ.பன்னீரும், எடப்பாடியும் அவரிடம் உடனடியாக பேசவில்லையாம். ராஜேந்திரபாலாஜி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். நான்கு வாரகாலம் விருதுநகர் மாவட்டத்தை விட்டு அவர் வெளியே செல்லக் கூடாது. இந்த நிலையில் ஓ.பன்னீரையும், எடப்பாடியையும் நேரில் சந்திக்கவே அவர் விரும்புகிறார். ஆனால் அதற்கு முன் சிறைசென்றுவிட்டு வந்த தன்னிடம் இரு தலைவர்களும் நலம் விசாரிக்கக் கூடவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருக்கிறது என்கிறார்கள் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்கள். இருக்காதா பின்னே?