ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத தமிழக அரசு...கண்டனம் தெரிவிக்கும் ஓபிஎஸ்!

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத தமிழக அரசு...கண்டனம் தெரிவிக்கும் ஓபிஎஸ்!
Published on
Updated on
2 min read

ஆசிரியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காத திமுக அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத தமிழக அரசு:

ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் கையாலாகாத திமுக அரசின் செயலை கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ மாணவியரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், செயல் வீரர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சிறந்த செல்வமாம் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் உன்னதமான, தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இவர்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசி பணி நாளன்று அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது.

நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சகணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை கடந்த அக்டோபர் மாதம் நிலவியது. இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாட்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கேள்வி எழுப்பிய ஓபிஎஸ்:

ஆனால், மூன்று மாதங்களாகியும் இந்தப் பிரச்சனை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தற்போது தெரிய வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளைத்தான் நிறைவேற்ற முடியவில்லை, அகவிலைப்படி உயர்வை உரிய நேரத்தில் தர முடியவில்லை என்றால், சம்பளத்தைகூட உரிய நேரத்தில் தர முடியாத கையாலாகாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியா என்றும் கேள்வி எழுப்பினார். எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com