சசிகலாவை நேரில் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர்...ஸ்வீட் எடுத்து கொண்டாடிய சசிகலா...!

சசிகலாவை நேரில் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர்...ஸ்வீட் எடுத்து கொண்டாடிய சசிகலா...!

அதிமுக உட்கட்சி பூசல்:

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நீறு பூத்த நெருப்பாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உட்கட்சி பூசல் பிரச்னையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். 

ஆகஸ்ட் 17 தீர்ப்பு:

அதன்படி, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்துசெய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அதில் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என்றும் தீர்ப்பளித்தார். 

சசிகலாவை இணைக்க தீவிரம்:

தனிநீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அதிமுகவை ஒன்றாக இணைந்து வழிநடத்துவோம் என சசிகலா, டிடிவிதினகரன் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், ஓபிஎஸ்சின் அழைப்பை ஈபிஎஸ் நிராகரித்ததால், அவருக்கு எதிராக பல்வேறு யூகங்களை வகுக்க தொடங்கினார் ஓபிஎஸ். முதற்கட்டமாக, சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கு ஓபிஎஸ் தீவிரம் காட்டி வந்தார். 

இதையும் படிக்க: பொய்க்கு நோபல் பரிசு..! அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் படம் நீக்கம்..! வெற்றி களிப்பில் எடப்பாடி பழனிசாமி..!

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு:

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் மேல் முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம் மீண்டும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். 

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை:

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வந்த தீர்ப்பிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரையும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று கூறி வருகிறார். ஆனால், ஓபிஎஸ் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று மும்மரமாக செயல்பட்டு வருகிறார். சசிகலா மூலம் அதிமுகவை கைப்பற்றலாம் என்ற யுக்தியை கொண்டே ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். 

சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர்:

சசிகலா அதிமுகவில் எண்ட்ரீ கொடுப்பாரா? இல்லையா? என்ற கேள்வியுடன் நகர்ந்து வருகிறது அதிமுக அரசியல். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்தினை பெற்றுள்ளார். மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் சசிகலாவை நேரில் சந்தித்து தனது பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். 

ஸ்வீட் எடுத்து கொண்டாடிய சசிகலா:

இதற்கு சசிகலாவும் பரஸ்பரமாக இனிப்பு வழங்கி வாழ்த்தினை தெரிவித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 
முன்னதாக, சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சந்திப்பானது அரசியல் பார்வையாளர்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பானது சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பேசுவதற்கான ஒரு சந்திப்பா? ஒருவேளை இந்த சந்திப்பிற்கு பிறகு, சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியும் அரசியல் வல்லுநர்களிடையே வட்டமடித்து வருகிறது.