தங்கச்சி முறை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞர்...காப்பு மாட்டி ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ்..!

செய்யாறில் கல்லூரி வகுப்பறைக்குள் புகுந்து மாணவியின் கையை பிடித்து தரதரவென கட்டாயப்படுத்தி இழுத்து வந்த அரசு கல்லூரி மாணவரை சக மாணவர்கள் அடித்து துவைத்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தற்போது பார்க்கலாம்..

தங்கச்சி முறை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞர்...காப்பு மாட்டி ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ்..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் இந்தோ அமெரிக்கன் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்குள் புகுந்த அரசு கல்லூரி மாணவர் தமிழரசன் என்பவர் அங்கு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை வெளியே வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அந்த மாணவி வெளியே வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், மாணவியின் வகுப்பறைக்கு சென்று கட்டாயப்படுத்தி தரதரவென இழுத்துச்சென்றார். இதனையடுத்து அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி பாதுகாவலர்கள் ஆகியோர் தமிழரசனை மடக்கி பிடித்து அவனிடம் இருந்து மாணவியை மீட்டதோடு, தமிழரசனை வெளுத்து எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

காவல்துறையினர் விசாரணையில் அந்த மாணவியை தனது காதலி என்றும் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரித்த போது உறவுமுறை தவறிய வில்லங்க காதல் வெளிச்சத்திற்கு வந்தது. 

தமிழரசனும் அந்த மாணவியும் ஐயங்கார் குளத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர், அப்போதிலிருந்தே அந்த மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் தாய்க்கு தமிழரசன் தமது பெண் பின்னால் சுற்றும் தகவல் தெரியவந்துள்ளது.  

தமிழரசனின் தாய், தந்தை குறித்து விசாரித்த மாணவியின் தாய், அந்த மாணவிக்கு தமிழரசன் அண்ணன் உறவு முறை என்று கூறியதால் அவர்களது காதல் முறிவு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களாக தமிழரசனுடன் பேசுவதை அந்த மாணவி துண்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தங்கையாக இருந்தாலும் பரவாயில்லை என்று காதல் தொல்லை கொடுத்து வந்த தமிழரசன், திரைப்பட பாணியில் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை தூக்கிச் சென்று தாலி கட்டும் நோக்கத்தில் மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளார். 

இதையடுத்து சைக்கோ காதலன் தமிழரசன் கையில் விழுங்குகளை மாட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் போலீசார் அடைத்தனர். திரைப்படங்களில் வருவது போன்று நாமும் காதலை செய்ய நினைத்தால் கடைசியில் என்னமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி...