அடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது! DARE ஆப்ரேஷனை கையிலெடுக்குது காவல்துறை… பீதியில் ரவுடிகள்!!  

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க DARE என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர் சென்னை காவல் துறையினர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

அடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது! DARE ஆப்ரேஷனை கையிலெடுக்குது காவல்துறை… பீதியில் ரவுடிகள்!!   

அடிதடி, வெட்டு-குத்து, ஆட்கடத்தல், கொலை, கொள்ளையென தொடர்கதையாகி வரும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தி.மு.க-வின் ஆட்சி காலத்தில் ரவுடிகளின் அராஜகம்  அதிகமாக இருக்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே இருந்து வருவது நாம் அறியாததல்ல. இக்கருத்தை வேரறுக்க ஆளும் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு முயற்சிகளை காவல் துறை மூலம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையிலான காவல் துறையினர் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பெருகி வரும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க சென்னை காவல்துறை DARE எனப்படும் Direct Action against Rowdy Elements என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர். இந்த ஆப்பரேஷன் மூலம் குறிப்பாக முக்கிய ரவுடிகளை A+ கேட்டகரி, A கேட்டகரி, B கேட்டகரி என அவர்களின் குற்றச் செயல்களுக்கு ஏற்ப வகைப்படுத்தி அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக உள்ள ரவுடிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறுகிறார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..

குறிப்பாக இந்த DARE ஆப்பரேஷனின் கீழ் பிரபல ரவுடிகளான சி.டி மணி, காக்காத் தோப்பு பாலாஜி உட்பட பலர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வகைப்படுத்தி கைது செய்யப்பட்ட 166 முக்கிய குற்றவாளிகள் உட்பட 21 ஆயிரத்து 289 ரவுடிகளின் பட்டியலையும் சேகரித்து , அதில் எத்தனை பேர் தற்பொழுது சிறையில் உள்ளனர்? எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர்? உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அதன் மூலமும் ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிணையில் வெளியே சென்ற ரவுடிகளின் பட்டியலில் 39 பேர் தற்பொழுது தலைமறைவாக இருந்து வருவதால் தனிப்படை அமைத்து அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை பல்வேறு குற்றச் செயல்கள் புரிந்த 194 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், A+ கேட்டகரியைச் சேர்ந்த தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் 21 குள்ளவாளிகளின் பட்டியலையும் சென்னை காவல்துறை தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை, கைது செய்யப்பட்ட ரவுடிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள், அதையும்தாண்டி தங்களைத் தாக்க வரும் ரவுடிகளைத் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்யும் சம்பவங்கள் என காவல் துறையினரின் இத்தனை செயல்பாடுகளையும் தாண்டி ரவுடியிசம் தொடர்கதையாகியுள்ளது.

ஒவ்வொரு A+ கேட்டகரி ரவுடிகள் மீதும் நீதிமன்றங்களில் 30-40 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வழக்குகள் முடிவடையாமல் நிலுவையில் இருக்கும்போதும் பிணையில் வெளியே வந்து மீண்டும் ரவுடிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுட்டு வருவதோடு சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தியே இவர்கள் தப்பித்து வருகின்றனர். காவல் துறையினரின் நடவடிக்கை எத்தனை கடுமையானதாக இருந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து நிலுவையில் உள்ள வழக்குகளை இரு முடிவுக்குக் கொண்டு வந்து குற்றவாளிகளை நிரந்தரமாக சிறைகளில் அடைத்தாலே ரவுடி கும்பலின் இந்த சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.