சசிகலா புளுகு மூட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் ஹண்டே..! எம்ஜிஆரிடம் ஒருபோதும் நெருக்கமாக இருந்தது கிடையாது..!

சசிகலா ஒருபோதும் எம்.ஜி.ஆர்-உடன் நெருக்கமாக இருந்ததில்லை..!

சசிகலா புளுகு மூட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் ஹண்டே..!  எம்ஜிஆரிடம் ஒருபோதும் நெருக்கமாக இருந்தது கிடையாது..!
அரசியலில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி விட்டு, தற்போது தேர்தலில் அதிமுக தோற்றப் பிறகு, அதிமுகவை கைப்பற்றுவேன்..கட்சியை காப்பேன்..என அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடம் செல்போனில் உரையாடி வருகிறார் சசிகலா..
 
தினந்தோறும் தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் பேசும் போது, நிச்சயம் மீண்டும் அரசியலுக்கு வருவேன், கட்சியை கைப்பற்றி, ஜெயலலிதா கட்சியை கொண்டு சென்றது போன்று கட்சியை வழி நடத்துவேன் என நம்பிக்கை அளித்து வருகிறார். கொரோனா சற்று தணிந்த பிறகு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நேரில் வந்து சந்திப்பேன் எனவும் தெரிவித்து வருகிறார். 
 
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சசிகலா தொண்டர் ஒருவரிடம் பேசிய ஆடியோவால் ஏற்பட்டது பெரிய சர்ச்சை. அந்த ஆடியோவில், ஜெயலலிதா மட்டுமின்றி எம்.ஜி.ஆர்-க்கும் தான் பல ஆலோசனைகளை கூறியுள்ளதாக தெரிவித்தது கட்சியினரிடையே மட்டுமல்லாது பொதுமக்களிடமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. என்னது எம்.ஜி.ஆர்-க்கு ஆலோசனை கொடுத்துள்ளாரா? என அனைவரும் ஆச்சர்யம் அடைந்து போனர். வழக்கம் போல நெட்டிசன்கள் தங்கள் கைவசம் இருந்த மீம்ஸ்களை இணையத்தில் அள்ளி தெளித்தனர். 

இப்படி இருக்க, உண்மை என்ன என யாருக்குமே ஒரு நிலையான நிலைப்பாடு கிடைக்கவில்லை. காரணம் சில தினங்களுக்கு முன்பு, வலம்புரிஜான் தனது வணக்கம் என்ற நூலில் சசிகலாவை ராமாபுரம் தோட்டத்திலும் தான் கண்டுள்ளதாகவும், எம்.ஜி.ஆர்-உடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தானே எம்.ஜி.ஆரிடம் சசிகலா போன்றோரை அருகே வைத்துக் கொள்ள வேண்டாம் என கூறியதாகவும், அதற்கு அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என பதிலளித்ததாகவும் தனது நூலில் கூறியிருக்கிறார். 
 
ஒருவேளை சசிகலா கூறியது உண்மைதானோ என நாம் ஒரு முடிவுக்கு வரும் நிலையில், இல்லை இல்லை அது உண்மை இல்லை எம்.ஜி.ஆர்-க்கு சசிகலா ஆலோசனைகளெல்லாம் கூறியதே இல்லை அதற்கான அவசியமும் வரவில்லை என்கிறார் டாக்டர் ஹண்டே..
 
எம்.ஜி.ஆர்.காலத்தில் கழகத்தின் துணை பொதுச் செயலாளராகவும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் டாக்டர் ஹண்டே. சசிகலாவின் பேச்சுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். எம்ஜிஆரை பொறுத்தவரை அவருக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவருக்கு பேச கற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை என ஹண்டே கூறுகிறார். 

1983ஆம் ஆண்டு கடலூர் கூட்டத்தில் ஜெயலலிதா பேசும் போதுதான் நடராஜன் மனைவி சசிகலாவிற்கு அறிமுகம் ஏற்பட்டதாகவும், ஜெயலலிதா உடன்தான் சசிகலாவும் நடராஜனும் நெருக்கமாக இருந்தார்களே தவிர எம்ஜிஆரிடம் ஒருபோதும் நெருக்கமாக இருந்தது கிடையாது எனவும் உறுதிபடத் தெரிவிக்கிறார். 
 
தலைமை நிலைய செயலாளர். அமைப்புப் செயலாளராக, கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ள ஹண்டே, தனக்கு தெரிந்த வரைக்கும் சசிகலா ஒருபோதும் எம்.ஜி.ஆர்-க்கு ஆலோசனை சொன்னதில்லை, அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை என்கிறார். 1983 வரைக்கும் ஜெயலலிதாவே எம்ஜிஆர் பக்கத்தில் இல்லை, பிறகு எப்படி சசிகலா பேசியிருப்பார் என அனைவரும் ஒத்துக் கொள்ளும் படியான கேள்வியையும் முன்வைக்கிறார் ஹண்டே. 

1983-ல் தான் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கி, கடலூர் மாநாட்டில் பேசினார். அதன் பிறகு தான் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது. ஆக 1983-க்கு பிறகு தான் அரசியல் ரீதியாக நெருக்கம் ஏற்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார். சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவிற்குத்தான் நெருக்கமாக இருந்தார்களே தவிர எம்ஜிஆருக்கு இல்லை எனக் கூறியுள்ள ஹண்டே, எம்ஜிஆரிடம் ஏதாவது பேசவேண்டும் என்றால் நடராஜன் தனக்குத் தான் போன் செய்வார் எனவும், எனவே எம்ஜிஆருக்கு ஆலோசனை சசிகலா சொன்னார் என்பது ஏற்புடையது இல்லை எனவும் கூறியுள்ளார். 
 
எம்ஜிஆரோடு சசிகலா எந்தக் காலத்திலும் நெருக்கமாக இருந்தது கிடையாது, எம்ஜிஆருக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை சொல்ல நாங்கள் இருந்தோம் அப்படி இருக்க,  பேச கற்றுக்கொடுத்தாகவும், ஆலோசனை சொன்னதாகவும் சசிகலா ஏன் சொல்கிறார் என்று தெரியவில்லை என ஹண்டே குழப்பத்துடன் கூறுகிறார். 

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா உடன்தான் சசிகலாவும் நடராஜனும் நெருக்கமாக இருந்ததாகவும், 
ஜெயலலிதாவுக்கு அரசியல் ரீதியான ஆலோசனைகளை நடராஜன் சொல்லி வந்ததையும் ஹண்டே குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும் போது 'எம்ஜிஆர் என்னுடன் ஆலோசித்தார்' என்று சசிகலா இப்போது கூறுவது எல்லாம் சரியானது இல்லை என கூறியுள்ள அவர், ”எம்.ஜி.ஆர் இப்போது உயிருடன் இல்லை என்பதாற்காக பரபரப்புக்காக எதை வேண்டுமானாலும் சொல்லக்கூடாது” என்றும் ஹண்டே விமர்சித்துள்ளார்.