ஆமை போல் பாலியல் வழக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்குமா?  

கடந்த 2020 ஆம் ஆண்டு 43 ஆயிரம் பாலியல் வழக்குகளில் விசாரணை துவங்கப்பட்ட நிலையில், அதில் 3 ஆயிரத்து 814 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

ஆமை போல் பாலியல் வழக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்குமா?   

நாட்டில் நடைபெறும் சிறு குற்றங்கள் முதல் கொடூரமான குற்றங்களின் புள்ளி விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மூலம் வெளியிடப்படும். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அந்த அறிக்கை மூலம் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை விகிதத்தை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில், கலவரம் தொடர்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 81 ஆயிரத்து 846 வழக்குகளில் 43 ஆயிரத்து 063 வழக்குகளுக்கு மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 4 ஆயிரத்து 613 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அது தவிர்த்து 5 லட்சத்து 19 ஆயிரத்து 589 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் கலவரம் தொடர்பான வழக்குகளில் வெறும் 29 சதவிகிதம் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு மொத்தம் 43 ஆயிரம் பாலியல்  வழக்குகளில் விசாரணை துவங்கப்பட்டு அதில் வெறும் 3, 814 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 50 ஆயிரத்து 258 கொலை வழக்குகளில் காவல்துறை மூலம் 24 ஆயிரத்து 015 வழக்குகளுக்கு மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 லட்சத்து 32 ஆயிரத்து 859 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்படி மிக கொடூரமான குற்றங்களாக கருதப்படும் பாலியல் மற்றும் கொலை போன்ற வழக்குகளில் முறையே 39 சதவிகிதம் மற்றும் 41 சதவிகிதம் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தரப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. கலால் சட்டம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில் மட்டுமே 94 சதவிகிதம் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது எனவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.