கௌரவ டாக்டர் பட்டம்: M.G.R முதல் S.T.R வரை...

நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கவுள்ளதாக வேல்ஸ் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், தமிழகத்தில் இதுவரை டாக்டர் பட்டம் பெற்ற திரைபிரபலங்களின் விவரங்கள் குறித்த தொகுப்பு இதோ

கௌரவ டாக்டர் பட்டம்:  M.G.R முதல் S.T.R வரை...

பொதுவாக கௌரவ டாக்டர் பட்டம்  மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அதாவது இலக்கியம், தத்துவம், கலை, இசை, கல்வி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் மற்றும் சட்டத்தில் சிறந்து விளங்கியவர்களை ஊக்குவிக்கும் விதமாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் தான் தற்போது ’மாநாடு’ என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த நடிகர் சிம்புவிற்கு, ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 11ம் தேதி நடக்கின்ற விழாவில், இந்த பட்டம் நடிகர் சிம்புவுக்கு வழங்கப்பட உள்ளது.   

இதற்கு முன்னதாக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் நடிகராக இருந்தபோதே கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு அரிசோனாவின் உலகப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்திலும் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சிவாஜி கணேசனுக்கு 1986ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட 5  பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்பித்து உள்ளன.

தனது அசாத்திய நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் பல விருதுகளை வென்று குவித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு 2005 இல் சத்யபாமா பல்கலைக்கழகம்  டாக்டர் பட்டம் வழங்கியது.

கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் விஜயகாந்த் புகழ்பெற்ற நடிகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்குகிறார். இவருக்கு 2011ஆம் ஆண்டு ப்ளோரிடாவில் சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம்  டாக்டர் பட்டம் அளித்தது.

நகைச்சுவை கலைஞரான சின்னி ஜெயந்த் நடிப்பு, பலகுரல், நாடகம் மற்றும் சமூக சேவை துறையில் மேற்கொண்ட முயற்சியை பாராட்டி 2013ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச மாற்று மருத்துவப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. 

நடிகர் நாசருக்கு  2016 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி  வேல்ஸ் பல்கலைக்கழகம்  டாக்டர் பட்டம் வழங்கியது. நடிகர் பிரபுவுக்கு 2011ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம்   டாக்டர் பட்டம் வழங்கியது. நடிகர் விஜய்க்கு 2007 ஆம் ஆண்டு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. 

விக்ரமுக்கு இத்தாலியில் உள்ள மிலன் பல்கலைக்கழகம் கடந்த 2011ம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இதேபோன்று நடிகரும் மரம் நடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான மறைந்த விவேக்குக்கு கடந்த  2015-ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது. அந்த வரிசையில் நடிகர் சிம்புவுக்கு விரைவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.