அமித்ஷா பாணியில் தமிழ்நாடு அமைச்சர்  மகன்...!

அமித்ஷா பாணியில் தமிழ்நாடு அமைச்சர்  மகன்...!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலில் போட்டியின்றி தேர்வானார் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி.

சூதாட்டம் நிறைந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தேர்தல்: 

கிரிக்கெட் சங்கம் என்றாலே சூதாட்ட புகார்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட் சங்கங்களில் சூதாட்டமானது  நிலவி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்கியதை கூட சொல்லலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன் கைவசம் வைத்திருந்த இந்தியா சிமெண்ட்ஸின் சீனிவாசன் குடும்பம் சென்னை சூப்பர் அணி சூதாட்டப் புகாரில் வசமாக சிக்கியது. அதிலும் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் முக்கிய குற்றவாளியாக சிக்கினார். 

லோதா கமிட்டியின் பணி என்ன?

இப்படி கிரிக்கெட் சங்க பதவிகளை குறிப்பிட்டவர்கள் மட்டும் பரம்பரையாக ஆண்டு அனுபவிப்பதை தடுக்கும் வகையில் லோதா கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டியின் நோக்கம் என்பது கிரிக்கெட் சங்க தேர்தலில் பரிந்துரைகளை அளிப்பதும், பதவிகளில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பது. இவர்களின் பரிந்துரைகளை தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: நாளைய ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு...ஏன் தெரியுமா? விளக்கம் இதோ!

தலைவரானார் சீனிவாசன் மகள்:

அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மீண்டும் போட்டியிட முடியாத நிலை உருவானது. இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது மகள் ரூபா குருநாத் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

துணைத்தலைவரானார் டாக்டர் அசோக் சிகாமணி:

அந்த தேர்தலின் போதே தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தலைவர் பதவிக்கு முயற்சி செய்தார். ஆனால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூலமாக இருக்கும் சீனிவாசன் தரப்பின் சமாதான முயற்சியால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி தேர்தெடுக்கப்பட்டார். 

தலைவர் பதவிக்கு போட்டி:

பொன்முடியின் மகனை பொறுத்தவரையில், பல ஆண்டுகளாக கிரிக்கெட் சங்கங்களுடன் தொடர்பில் இருப்பவர். அதேசமயம், விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் துணைத் தலைவராக இருக்கும் அவர்,  இந்த ஆண்டு  இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியின் வேட்பாளராக டாக்டர் அசோக் சிகாமணி தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக எஸ்.பிரபு என்பவர் களம் இறங்கினார். 

ஜெய்ஷாவின் ஆதரவு:

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் அசோக் சிகாமணிக்கு, அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ தலைவருமான ஜெய்ஷாவின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. 

இதையும் படிக்க: சிவில் கோர்ட் உத்தரவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கில்...நீதிபதியின் உத்தரவு என்ன?

போட்டியின்றி தேர்வு:

இந்த சூழ்நிலையில், அசோக் சிகாமணிக்கு எதிராக களம் இறங்கிய எஸ்.பிரபு குழுவினர், இன்று தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து விலகினர். இதையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில்  போட்டியின்றி தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும், எந்தவித போட்டியும் இன்றி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைவராக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னித்து கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது. லோதா கமிட்டியின் பரிந்துரைபடி டாக்டர் அசோக் சிகாமணி தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது தலைவராக தேர்தெடுக்கப்பட்டிருப்பது அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் ஆதரவால் தான் என்ற பேச்சும் கிசுகிசுக்கப்படுகின்றன.