ஓரங்கட்டப்பட்ட 5 பேர்... தட்டித் தூக்கிய ஸ்டாலின்!! மத்திய அரசை அலறவிடும் தமிழ்நாடு.! 

ஓரங்கட்டப்பட்ட 5 பேர்... தட்டித் தூக்கிய ஸ்டாலின்!! மத்திய அரசை அலறவிடும் தமிழ்நாடு.! 

பாஜகவின் பொருளாதார கொள்கைகளை தீவிரமாக எதிர்க்கும் நபர்களை ஸ்டாலினின் பொருளாதாரக் குழுவில் நியமித்துள்ளது பாஜக ஆதரவாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான 'பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக்குழு' அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றது. ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக ஜான் த்ரே, ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றிய ரகுராம் ராஜன் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பிரதமரின் முதன்மை பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அதன் பின் 2014 இல் பாஜக ஆட்சி வந்ததும் இவருக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. 

அரசின் பல திட்டங்களை இவர் எதிர்த்ததால் பாஜக தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் பாஜக தலைவர் சுப்ரமணிய சாமியால் அமெரிக்க கைக்கூலி என்றும் விமர்சிக்கப்பட்டார். தற்போது ஸ்டாலினின் பொருளாதாரக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். 

மேலும், தமிழகத்தை சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன். புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற இவரை இவரை உலகின் முதல் 100 உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக  ஃபாரின் பாலிசி என்ற இதழ் இவரை தேர்ந்தெடுத்தது. உலகளாவிய மேம்பாட்டு மையத்தில் மூத்த ஆய்வாளராகவும்,  அனைத்துலக நாணய நிதியத்தில் பொருளியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக செயல்பட்டுள்ளார். இவரை அந்த பதவியிலிருந்து மாற்றவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியிருந்தார். அதன்பின் அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியராக செயல்பட்ட இவர் அந்த பொறுப்பிலிருந்து விலகினார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஒன்றிய அரசை விமர்சித்த பிரதாப் பானு மேத்தா என்பவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. அதை கண்டித்து அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்தது இந்தியா முழுக்க பேசப்பட்டது. இதன் காரணமாக தமிழக முதல்வரின் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளது இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 


இவர்கள் எல்லாருக்கும் மேலாக தற்போது இந்திய குடிமகனான பெல்ஜியத்தில் பிறந்த ஜான் த்ரே இலண்டன் பொருளியல் பள்ளியிலும், தில்லி பொருளியல் பள்ளியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.  இந்திய அரசின் திட்டக்குழுவில் இடம்பெற்ற இவர்  பொருளியல் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் பொருளியல் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். 

இந்தியாவுக்கு பொருளாதார தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், போட்டி சந்தைகளை உருவாக்குதல் போன்றவை நிச்சயம் தேவை என்று வாதிட்ட இவர், ஆனால் இவை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே முக்கியம் என்றும் இதில் சமூகநீதி மிக முக்கியம் என்றும் கருதுபவர். சமூகநீதி என்றும் கோட்பாடு தான் இவரையும், திமுகவையும் இணைத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜான் த்ரே ஆகிய இருவர் இணைந்து எழுதிய புத்தகங்கள் உலக அளவில் புகழ்பெற்றது. 

இவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்துக்களை நேரடியாகவே எதிர்த்துள்ளார். மேலும் பாஜக அரசின் பொருளாதார திட்டங்களை கடுமையாக எதிர்த்துள்ளார். இதன் காரணமாக இவரை பாஜக ஆதரவாளர்கள் அர்பன் நக்சல் என்று அழைத்துள்ளனர். 

இது தவிர பிரெஞ்சு அமெரிக்கனான எஸ்தர் டஃப்லோ 2019ம் ஆண்டு அபிஜித் பானெர்ஜீயுடன் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்டார். இவர் தற்போது மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் பேராசிரியராகவும் இருக்கிறார். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். 

இவரது ஆய்வுகள் வளரும் நாடுகளின் பொருளாதரச் சூழ்நிலையியல், இல்லற நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம், மதிப்பீட்டு கொள்கை ஆகியவை பற்றியதாகவும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவரது ஆலோசனைகள் இன்றியமையாததாகும். பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்கான பொருளாதாரம் பற்றி அதிகம் பேசிவரும் இவர், இத்தகைய மக்களுக்கு ஒரு அரசு எப்படி உதவமுடியும், உதவவேண்டும் என்று பல்வேறு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

மேலும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பயின்ற எஸ்.நாராயணன் 2003-04 ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகராக இருந்தார். மேலும் தமிழகத்தில் ஊரக வளர்ச்சி துறை ஆணையத்தின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் நிதி, பெட்ரோலியம், விவசாயம், நெடுஞ்சாலை போன்ற துறைகளின் கொள்கை வடிவமைக்கும் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். 

ஒன்றிய நிதியமைச்சகத்தின் நுண்பொருளாதாரம், மற்றும் மேக்ரோ பொருளாதார கொள்கை வடிவமைப்பு குழுவிலும் இடம்பெற்றுள்ளார். மேலும் சில தனியார் நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

இவர்கள் அனைவருமே பாஜகவின் பொருளாதார கொள்கைகளை பல்வேறு சந்தர்ப்பத்தில் எதிர்த்துள்ளனர். இதன் காரணமாகவே அரசின் முக்கிய பதவியிலிருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஸ்டாலினின் பொருளாதார குழுவில் இடம்பெற்றுள்ளது பாஜகவை எதிர்க்கும் ஸ்டாலினின் மிகப்பெரிய திட்டம் என்றே கூறப்படுகிறது.