தமிழ் எங்கள் அதிகாரம்; இந்தி திணிப்பு சர்வாதிகாரம்- ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து ஆவேச முழக்கம்!

ஆங்கிலம் அந்நிய தேசத்து மொழி ஆனால் நாங்கள் அறியாத மொழியல்ல; இந்தி உள்நாட்டு மொழி ஆனால் நாங்கள் அறியாத மொழி..!

தமிழ் எங்கள் அதிகாரம்; இந்தி திணிப்பு சர்வாதிகாரம்- ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து ஆவேச முழக்கம்!

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கவிஞர் - பாடலாசிரியர் வைரமுத்து தலைமையில் முப்பதிற்கும் மேற்பட்ட அமைப்புகள் இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து மற்றும் தமிழ் கூட்டமைப்பினர் மத்திய அரசிற்கும், இந்தி மொழிக்கும் எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். 


ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேச்சு

ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று பேசிய வைரமுத்து, தமிழ் மொழிக்கு ஒரு வரலாற்று நெருக்கடி எழுந்திருக்கிறது; தமிழ் மொழிக்கு இது புதியதொன்றும் இல்லை. தமிழை மதத்தால், அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். இப்போது சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். 

இந்தி திணிப்புக்கு எதிராக 1965ல் எழுந்த எழுச்சியை விட 2022ல் தமிழர்கள் கூடுதல் உணர்ச்சி பெற வேண்டும். இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணிகளில் இடம் பெற முடியாது என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது என தெரிவித்தார்.


தமிழ் எங்கள் வாழ்வு; ஆங்கிலம் எங்கள் வசதி

தொடர்ந்து பேசிய வைரமுத்து, தமிழ் எங்கள் வாழ்வு; ஆங்கிலம் எங்கள் வசதி. ஆங்கிலம் அந்நிய தேசத்து மொழி ஆனால் நாங்கள் அறியாத மொழியல்ல; இந்தி உள்நாட்டு மொழி ஆனால் நாங்கள் அறியாத மொழி. இந்தி மொழி மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. எப்படி அண்டை மாநில மொழிகளை மதிக்கின்றோமோ அதே போல் இந்தியையும் மதிக்கிறோம்.

மேலும் படிக்க: விவாதப் பொருளாக மாறிய ரிஷி சுனக்..!!

எங்கள் ஜன்னலை உடைக்காமல் உங்கள் மரத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

நீங்கள் எங்களின் பக்கத்து வீடு, இந்தி உங்கள் வீட்டு மரம்; வளர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், அதன் வேர்கள் எங்கள் சுற்றுச் சுவரை இடித்து விடாமலும், கிளைகள் ஜன்னல் கதவுகளை உடைத்து விடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்; பொறுத்துக் கொள்ள மாட்டோம்.


தமிழ் எங்கள் அதிகாரம்; இந்தி திணிப்பு சர்வாதிகாரம்

இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் கவுதமன், தமிழ் இலக்கியவாதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் "தமிழ் எங்கள் அதிகாரம்; இந்தி திணிப்பு சர்வாதிகாரம்" போன்ற பல்வேறு கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.