"83 மதிப்பெண்ணுக்கும் 84 மதிப்பெண்ணுக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசம்" விளக்கமளித்த இளம் பெண்..! வாழ்த்திய முதலமைச்சர்..!!  

"83 மதிப்பெண்ணுக்கும் 84 மதிப்பெண்ணுக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசம்" விளக்கமளித்த இளம் பெண்..! வாழ்த்திய முதலமைச்சர்..!!  

" பட்டியலின சாதியை சேர்ந்த மாணவன் பெறும் 83 மதிப்பெண்ணுக்கும் முன்னேறிய சாதியை சேர்ந்த மாணவன் பெறும் 84 மதிப்பண்ணுக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசம்  "...என  விளக்கமளித்த இளம்  பெண்ணுக்கு   முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் "தமிழ்ப் பேச்சு. எங்கள் மூச்சு" என்ற நிகழ்வு கடந்த ஏப்ரல் 16 ஆம் நாள் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை தோறும்  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இளம் சொற்பொழிவாளர்கள் தெரிவு செய்யப்பட்டு உரையாற்றி வருகின்றனர். இந்நிகழ்சியில் இடம்பெறும் பேச்சாளர்களின் எழுச்சி மிகு உரைகள் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் ஜி.ஞானசம்பந்தம், நாஞ்சில் சம்பத் மற்றும் பர்வீன் சுல்தானா ஆகிய புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் நடுவர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (மே 28) ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில், இட ஒதுக்கீடு எனது உரிமை என்ற தலைப்பில் திருவாரூரை சேர்ந்து நர்மதா என்பவர் உரையாற்றினார். தனது கம்பீரமான குரலில் இவர் எடுத்து வைத்த கருத்துகள் சாதிய மயக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட இட ஒதுக்கீட்டின் தேவையை புரியவைக்கும் அளவிற்கு தெளிவாக அமைந்திருந்தன. இரண்டரை நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் சாதிய சமூகத்தில் இட ஒதுக்கீட்டின் தேவையை அவர் உணர்த்தியுள்ளார். இந்த காணொளிக் காட்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த ஊரான திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துவதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் "கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பகிர்ந்த வீடியோவில் நர்மதா ஆற்றிய உரையில், "எந்த சாதியின் அடிப்படையில் எனது கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்டதோ அதே சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை பெறுவது எனது உரிமை. எங்கு, எவருக்கு, எதன் காரணத்தால் உரிமை மறுக்கப்பட்டதோ, அங்கு, அவருக்கு, அதேக் காரணத்தை கொண்டுதான் உரிமையை மீட்டுக்கொடுக்க முடியும். இதனால்தான் இந்தியாவில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

"84 மதிப்பெண் எடுத்த எனக்கு கிடைக்காத வாய்ப்பு 83 மதிப்பெண் எடுத்த பட்டியலினத்தவனுக்கு கிடைக்கும் என சொன்னால் அங்கே எனக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது" என்று முன்னேறிய வகுப்பை சேர்ந்த ஒரு மாணவன் முகநூலில் பதிவிட்டுள்ளதை சற்று விவாதத்திற்கு உள்ளாக்கிய அவர், 84 மதிப்பெண்ணுக்கும் 83 மதிப்பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். "இடையில் ஒரு மதிப்பெண்தான் இருக்கிறது" எனும் நமது பதிலை நிராகரிக்கும் அவர், தன்னை பொறுத்த வரையில் அந்த இரு வேறு மதிப்பெண்களுக்கு இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளி இருப்பதாக தெரிவித்தார்.  

தொடர்ந்து, இதனை விளக்கும் விதமாக, "முன்னேறிய வகுப்பை சேர்ந்தவனின் தாத்தா கணக்காளராக இருந்த அதேநேரத்தில், அவரது தோட்டத்தில் களைபறித்துக் கொண்டிருந்தவனின் பேரன் தானே இந்த ஒடுக்கப்பட்டவன். முன்னேறிய சாதியை சேர்ந்நதவனின்  தந்தை மருத்துவனாக இருந்தபோது அவனது வீட்டில் மலம் அள்ளிக் கொண்டிருந்தவன் தானே இந்த ஒடுக்கப்பட்டவன்" என இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். 

மேலும், முன்னேறிய வகுப்பில் இருந்து வந்த ஒருவன் எடுத்த மதிப்பெண்ணுக்கும் முன்னேற்றத்தின் வாசனைக் கூட படாத ஒருவன் எடுத்த மதிப்பெண்ணுக்கும் இடையில் குறைந்த அந்த ஒரு மதிப்பெண்ணானது, தாழ்த்தப்பட்டவனின்  மதிப்பை குறைத்துக்காட்டவில்லை எனவும் அவரை தாழ்த்தியே வைத்திருந்த இந்த சமூகத்தின் மதிப்பெண்ணை அல்லவா குறைத்துக்காட்டுகிறது எனவும் வினவியுள்ளார்.

நிறைவாக, இட ஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்டவரின் சலுகையாக பார்க்காதீர்கள். உரிமையற்றவனுக்கு அளிக்கப்படும் உரிமையாக பாருங்கள். வாய்ப்பு மறுக்கப்பட்டவனுக்கு கொடுக்கும் நீதியாக பாருங்கள் என அவர் அறிவுறுத்திய போது கைத்தட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது. 

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!