அண்ணாமலையின் குற்றச்சாட்டு...ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன?

அண்ணாமலையின் குற்றச்சாட்டு...ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன?

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பு தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வந்த பிரதமர் மோடி:

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை மாதம் கோலாகலமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை புரிந்திருந்தார். 

குற்றம் சாட்டிய அண்ணாமலை:

இந்நிலையில், கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கடந்த ஜூலை மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பணியில் இருந்து மாநில அரசு தவறிவிட்டது என குற்றம் சாட்டினார். பல மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலை செய்யவில்லை எனவும், காவல் துறையினர் பழுதடைந்த கருவிகளையே பெயருக்காக வைத்திருந்தனர் எனவும் உரிய ஆதாரத்தின் அடிப்படையில், ஆளுநரிடம் இதை குற்றச்சாட்டாகத் தெரிவித்திருப்பதாக அண்ணாமலை கூறினார்.

பதிலளித்த டிஜிபி:

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. அதுதொடர்பாக எந்த தகவல் பரிமாற்றங்களும் கிடையாது.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறை பயன்படுத்தக்கூடிய அனைத்துவிதமான உபகரணங்களும், பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து, ஏதாவது உபகரணங்கள் காலாவதியாகியிருந்தால், அதனை மாற்றும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தற்போது இருப்பதிலேயே தமிழக காவல்துறை வசம்தான் நல்ல தரமான உபகரணங்கள் இருப்பதாக தெரிவித்த அவர், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது தவறான குற்ற்ச்சாட்டு என்று தெரிவித்தார்.

அறிக்கை கேட்ட ஆளுநர்:

இந்நிலையில் பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பு தொடர்பாக அண்ணாமலை வழங்கிய புகார் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தலைமை செயலாளர் இறையன்புவிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த பின்னணியில், ஆளுநரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரை இன்று அண்ணாமலை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.