
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை, திருமணமான ஐந்தே நாட்களில் பெண்ணின் சகோதரரும் மைத்துனரும் ஆணவக்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விருந்துக்கு அழைத்து புதுமணத் தம்பதியினரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த அண்ணன், மாற்று சமூகத்தினரை மணம் முடித்ததால் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நடந்தது என்ன என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்...
காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டு விட்டோம் எனக்கூறி வீட்டுக்கு அழைத்து நிறைமாத கர்ப்பிணியை மகள் எனவும் பார்க்காமல் கொலை செய்த சம்பவத்தைக் காட்டியது தான் இக்குறும்படம். பாவக்கதைகள் தொடரின்படி இதில் மகள் மட்டும் கொல்லப்படும் நிலையில், கும்பகோணத்தில் நடந்த உண்மை சம்பவத்தில் தம்பதியினர் இருவருமே கொடூரமாக நடுரோட்டில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம் அருகே துலுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சரண்யா செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயதான மோகன் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் 5 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டதை அடுத்து கிராமத்தை விட்டு வேறு ஊரில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே துலுக்கவேலி கிராமத்தில் ஒருவரது நகையை சரண்யா அடமானம் வைத்திருந்த நிலையில், அதனை மீட்டுத் தரக்கோரி நகையின் உரிமையாளர் சரண்யாவை தொந்தரவு செய்துள்ளார். இதனால் வேறு வழியின்றி கணவனுடன் சொந்த கிராமம் சென்ற சரண்யா, அதற்கான ஏற்பாடுகளை செய்ததாகத் தெரிகிறது.
அப்போது சரண்யாவின் அண்ணன் சக்திவேல் பாசமாகப் பேசி இருவரையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி புதுமண ஜோடி சென்றநிலையில், விருந்தை முடித்து விட்டு ஊர்திரும்ப ஆயத்தமாகினர். அப்போது சரண்யாவின் மைத்துனர் ரஞ்சித்தும் அண்ணன் சக்திவேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகனை ஓட ஓட விரட்டி கொலை செய்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்திருந்த சரண்யாவையும் சரமாரியாக வெட்டியதில் புதுமண ஜோடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு அப்பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து இரட்டைக் கொலைக்குக் காரணமான சக்திவேலும் ரஞ்சித்தும் போலீசில் சரணடைந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மைத்துனர் ரஞ்சித்துக்கு சரண்யாவை மணம் முடித்து வைக்க சக்திவேல் திட்டமிட்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது மாற்று சமூகத்தினரை திருமணம் செய்து கொண்டதால் சாதிமாறி மணம் முடித்த ஆத்திரத்தில் புது மண தம்பதியை கொலை செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக சோழவரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விருந்துக்கு பரிமாறிய உணவில் விஷம் வைத்துக் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நிலையில், வலியுடன் துடிதுடித்து சாக வேண்டும் என்ற எண்ணம் சாதிவெறியில் இருந்து மட்டுமே தோன்றியிருக்க முடியும். விருப்பம் இல்லாத திருமணத்தை தடுத்து, சாதிமாறி திருமணம் செய்து கொண்டது சொந்தத் தங்கையாகவே இருந்தாலும், கொலைதான் செய்வேன் எனக் கிளம்புவது 21ம் நூற்றாண்டிலும் புதிதல்ல என்ற நிலையை உரிய கல்வியும் சட்டங்களும் மட்டுமே மாற்றும் என்பதே நிதர்சனம்...