உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஈபிஎஸ்க்கு பின்னடைவா...?நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்ன?

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஈபிஎஸ்க்கு பின்னடைவா...?நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய, ஓ.பி.எஸ்-யையும் இணைத்து அதிமுக பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், அதில் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை, தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை :

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் தனது கையொப்பத்துடன் கூடிய வேட்பாளரின் படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாகவும், இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் நிலவுவதால், தன்னை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கோரி, ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு இந்த மனுவை விசாரித்தனர்.

இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாமல் போனால் மகிழ்ச்சியாக இருக்குமா?

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, சின்னம் முடக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வேட்பாளரை அறிவித்துள்ளோம் என்று  ஓபிஎஸ் தரப்பிலும், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் வேட்பாளரை அறிவித்துள்ளோம் என்று ஈ.பி.எஸ். தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாமல் போனால் மகிழ்ச்சியாக இருக்குமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதையும் படிக்க : ஒரே வேட்பாளர்...அதுதான் பாஜாகவின் நிலைப்பாடு...!

பொதுக்குழுவை நடத்த வேண்டும் :

இருவரும் இணைந்து தீர்வு காணும்போது என்ன பிரச்னை உள்ளது என கேள்வி எழுப்பிய  உச்சநீதிமன்ற நீதிபதிகள், வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஏன் பொதுக்குழுவை  கூட்டக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். கட்சியின் விதிமுறைகளின் படி ஆட்சிமன்ற குழு தான் வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறது என்று ஓபிஎஸ் தரப்பு கூறியதையடுத்து, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்ட ஓ.பி.எ.ஸ் உள்ளிட்டோரையும் இணைத்து, தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அந்த கூட்டத்தில் வேட்பாளரை தேர்வு செய்து, அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு வேட்பாளரை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவைத்தலைவர் பரிந்துரை செய்யும் வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் நிதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இந்த உத்தரவு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.