தமிழ்நாட்டின் அடுத்த பெருமை நிகர் சாஜி!

தமிழ்நாட்டின் அடுத்த பெருமை நிகர் சாஜி!

சந்திராயன் 3 வெற்றியின் போது பிரதமர் நரேந்திரமோடி, சாதனையாளர்களை வரிசைப் படுத்தியபோது சந்திராயன் 3 செயல் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பெயரையும் குறிப்பிட்டது தமிழ்நாட்டு மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து வீரமுத்துவேல் யார்? என தேடல் அதிகமானதும், அவரது தாய் தந்தை, அண்டை வீட்டாரை கூட யூ-டியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் பேட்டி எடுத்து வந்தனர். அந்த வகையில் சந்திராயன் 3 விண்கலத்தை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கு தயாராகியிருக்கிறது ஆதித்யா எல்-1 என்ற விண்கலம். 

இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்ட் டவுண் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ஆதித்யா எல்-1 செயல் திட்டத்தின் இயக்குநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான் நபி பள்ளி வாசல் ஜமாத் பகுதியைச் சேர்ந்த நிகர் சாஜி என்ற பெண்மணிதான் அவர். ஷேக் மீரான் - சைத்தூண் பீவி ஆகியோரின் மகளான நிகர் சாஜி செங்கோட்டையில் தனியார் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 433 மதிப்பெண்களை பெற்றவர் 12-ம் வகுப்பில் 1200-க்கு 1008 மதிபெண்களை பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவியாக சாதனை படைத்தார்.

பின்னர் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் முடித்தவர் பிர்லா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் மேற்படிப்பை முடித்த பின் இஸ்ரோ நிறுவனத்தில் இணைந்தார். கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராகவும் அவரது மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருவதோடு மற்றொரு மகள் தஸ்நீம் பெங்களூரில் படித்து வருகிறார். 

மேலும் நிகர்சாஜியின் சகோதரர் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராகவும் அவரது தங்கை ஆஷா கேரளாவில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.  கல்வி எனும் கடலில் மூழ்கி முத்துக்குளியளிட்டு, தற்போது இந்திய அளவில் சாதனை படைக்க காத்திருக்கும் நிகர் சாஜி தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளமாக மாறியுள்ளார்.

இதையும் படிக்க:"கச்சத்தீவு மீட்பு; ஆலோசித்து நடவடிக்கை" எல்.முருகன் நம்பிக்கை!