தேடி சென்ற ஓபிஎஸ் – தேடி வர வைத்த இபிஎஸ்...குடியரசு தலைவர் தேர்தல் அதிமுகவில் நடந்த அமைதி யுத்தம்!

தேடி சென்ற ஓபிஎஸ் – தேடி வர வைத்த இபிஎஸ்...குடியரசு தலைவர் தேர்தல் அதிமுகவில் நடந்த அமைதி யுத்தம்!

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் முர்மு தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் நடக்கும் அதிகாரப்போட்டியின் ஒரு பிரிவாக அமைதியான யுத்தம் ஒன்று நடந்து முடிந்தது. ஆம், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நடந்து வரும் யுத்தத்தின் ஒரு சிறிய யுத்தமாக முர்முவின் தமிழ்நாடு வருகை மாறியிருந்தது. 

மேடையை பகிர்வாரா ஓபிஎஸ்:

முர்மு பங்கேற்கும் நிகழ்ச்சி மேடையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அமைந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே இபிஎஸ்ஓபிஎஸ் இருவரும் தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்துவிட்டனர். இருப்பினும், இருவரும் தனித்தனி அறைகளிலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர். இருப்பினும், முர்மு வந்த பிறகு இருவரும் ஒரே மேடையை பகிர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும், பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் முர்மு அமர்ந்த மேடைக்கு இபிஎஸ் மட்டுமே வந்தார். அத்துடன், பாஜக நிர்வாகிகளை விட மேடையில் அதிமுக நிர்வாகிகளே அதிக எண்ணிக்கையில் அமர்ந்திருந்தனர். குறிப்பாக, செம்மலை, தம்பி துரை உள்ளிட்டோருக்கும் மேடையிலேயே இடம் ஒதுக்கப்பட்டது. இதனால், அதிமுகவில், இபிஎஸ் கையே குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தருவதில் ஓங்கிருந்தது வெளிப்பட்டது.

தேடி சென்ற ஓபிஎஸ் – தேடி வர வைத்த இபிஎஸ்:

அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு சர்ச்சைக்கு அடுத்த நாளே குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் முன்னிறுத்தப்பட்ட முர்மு வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்ச்சியும் நடந்தது. அந்த நிகழ்வில் பங்கேற்க இபிஎஸ் – ஓபிஎஸ் இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இபிஎஸ் செல்லவில்லை. மாறாக, ஓபிஎஸ் மட்டும் தனது ஆதரவாளர்களுடன் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த சம்பவத்தால், ஓபிஎஸ் கை ஓங்கி இருப்பதாக ஒரு சித்திரம் வெளிப்பட்டது. அதற்கு ஏற்ப, முர்முவையும் ஓபிஎஸ் தனியாக சந்தித்து பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனால், பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு இருப்பதாக பேசப்பட்டது. இந்த பின்னணியில் தான், முர்முவின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிருந்தது. இந்த நிகழ்ச்சியில், முர்முவை இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக சந்திப்பார்களா? அல்லது தனித்தனியாக சந்திப்பார்களா என்ற குழப்பம் நிலவியது. டெல்லிக்கு ஓபிஎஸ் சென்றாலும் சென்னைக்கு முர்முவை வர வைத்து தனது ஆதரவை பச்சை சால்வை அணிவித்து இபிஎஸ் பலமாக உறுதி செய்தார். 

எங்கே போனார் ஓபிஎஸ்?:

விழா நடைபெறும் சென்னை தனியார் விடுதியில் தனி அறையில் மட்டுமே ஓபிஎஸ் இருந்தார். அவருடன், ஓபிஎஸ் ஆதரவாளர்களான, ரவீந்திர நாத், வெள்ளமண்டி நடராஜன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் விழா மேடைக்கு ஓபிஎஸ் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும் கூட ஓபிஎஸ் விழா அரங்கிற்கு வருகை தரவில்லை. நீண்ட நேரம் தனி அறையிலேயே காத்திருந்துவிட்டு பிறகு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.

 பலத்தை நிரூபித்த இபிஎஸ்:

முர்மு பங்கேற்ற நிகழ்ச்சியில் இபிஎஸ் தனது பலத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். அதாவது, தனது ஆதரவாளர்கள் புடை சூழ விழாவுக்கு வந்தார். குறிப்பாக, இபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக முதன்மை செயலாளர் பொன்னையன் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, செம்மலை, வைகைச் செல்வன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விழா மேடைக்குள் இபிஎஸ் நுழைந்தது முதலேயே அவரை மையமாக வைத்து தான் நிகழ்வுகள் நடத்தப்பட்டது வெளிப்படையாக தெரிந்தது. கூட்ட அரங்கினுள் இபிஎஸ் நுழைந்ததும், அதிமுக எம்.எல்.ஏக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். அதே போலவே, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக துணை தலைவர் வி.பி. துரைசாமி உள்ளிட்டோரும் நேராகவே சென்று இபிஎஸ்-ஐ வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், இபிஎஸ் கை ஓங்கிருந்தது தெரியவந்தது.