ஜெயலலிதாவின் அந்த 75 நாட்கள்... நடந்தது என்ன - நீடிக்கும் மர்மங்கள்...

அப்பல்லோவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என்பது இப்போது வரையிலும் மர்மமாக இருந்து வரும் நிலையில், அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நாளில் இருந்து மரணம் அடைந்த தகவலை அறிவித்தது வரையிலும் என்னென்ன நடந்த நிகழ்வுகள்.

ஜெயலலிதாவின் அந்த 75 நாட்கள்... நடந்தது என்ன - நீடிக்கும் மர்மங்கள்...

புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, இதய தெய்வம், அம்மா என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அசைக்க முடியாத அளவுக்கு வெற்றியை வாழ்நாள் முழுவதும் பெற்று வந்த ஜெயலலிதாவின் இறுதி நாட்கள் என்பது மர்மம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்த நாளில் இருந்து மரணம் அடைந்த தகவலை அறிவித்தது வரையிலும் என்னென்ன நடந்தது என்பதை நினைவு கூர்வது அவசியமாகிறது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று இரவு 9.30 மணிக்கு அப்பல்லோவுக்கு ஆம்புலன்ஸ் ஒன்று பறந்து சென்றது. சில நிமிடங்களிலேயே போயஸ் கார்டன் கிடுகிடுத்தது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையின் வளாகத்தில் கூடினர்.

செப்டம்பர் 23-ம் தேதியன்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். கொள்கை ரீதியாக வேறுபட்டாலும், விரைவில் உடல்நலம் பெற்று பணியைத் தொடர வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

25-ம் தேதியன்று காய்ச்சல் குணமடைந்ததாகவும், அனைத்து உணவையும் எடுத்துக் கொள்வதாகவும் கூறப்பட்டது. 29-ம் தேதியன்று இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 30-ம் தேதியன்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கியது. ஆனால், இவ்வாறான வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதே நேரம், இன்னும் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராகவில்லை என லண்டனில் இருந்து வந்த ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

அக்டோபர் 1-ம் தேதியன்று ஆளுநர் வித்தியாசாகர் ராவ், முதல்வர் உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்தார். அக்டோபர் 3-ம் தேதியன்று ஜெயலலிதாவின் சுவாசத்தில் குறைபாடு இருப்பதாக அப்போதுதான் தெரியவந்தது. அக்டோபர் 5-ம் தேதியன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவக்குழு அப்பல்லோவுக்கு வந்தது. 8-ம் தேதியன்று செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 11-ம் தேதியன்று தமிழக அரசின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டது. 12-ம் தேதியன்று அமித்ஷா, அருண் ஜெட்லி ஆகியோர் அப்பல்லோவுக்கு வந்தனர். அது முதல், சூப்பர் ஸ்டார் ரஜினி முதல், திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நலன் குறித்து சசிகலாவிடம் கேட்டறிந்தனர்.

அக்.29-ம் தேதி தீபாவளி பண்டிகை, வழக்கமாக அல்லாமல் அமைதியாகவே கடந்தது. நவ.1-ம் தேதி விரைவில் ஜெயலலிதா வீடு திரும்புவார் என பொன்னையன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். நவ.13-ம் தேதியன்று ஜெயலலிதா எழுதிய கடிதம் என ஒன்று வெளியானது. அதில் நான் குணமடைந்து வருகிறேன். மறுபிறவி எடுத்துள்ளேன் திரும்ப வருகிறேன் என குறிப்பிட்டிருந்தது. நவ.19-ம் தேதியன்று பூரண குணமடைந்து தனி வார்டுக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியானது. 22-ம் தேதியன்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் பலம் குறித்தும், தொண்டர்களைப் பாராட்டும் விதமாகவும் ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட ஒரு கடிதம் வெளியானது.

நவ 24-ம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வந்து அப்போதைய எம்.பி.க்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார். இப்படி நாளுக்கு நாள் பரபரப்பைக் கூட்டிக் கொண்டிருநத அப்பல்லோ, டிசம்பர் 4-ம் தேதியன்று தமிழ்நாட்டையே கதிகலங்க வைத்தது. 4-ம் தேதியன்று ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருப்பாகவும், இதய செயல்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது. அப்போது முதல் தமிழ்நாட்டில் பரபரப்புத் தீ பற்றிக் கொண்டது. 

இறுதியாக டிச 5-ம் தேதியும் வந்தது. அந்த துயரச் செய்தி வெளியாகி மக்களை வேதனையின் விளிம்பில் தள்ளியது. மாலை ஐந்து மணிக்கே ஜெயலலிதா இறந்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் உடனடியாக இதை அப்பல்லோ நிர்வாகம் மறுத்து விட்டது. ஆனால் அன்றைய நாள் இரவு 11.30 மணியளவில் மாரடைப்பின் காரணமாக ஜெயலலிதா காலமானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இப்படி செப் 22 முதல், டிச 5-ம் தேதி வரையிலும் அப்பல்லோவில் நடந்தது என்ன என்பது இப்போது வரையிலும் மர்மமாக இருந்தாலும், அந்த மர்மத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்கு மக்கள் விரும்புகின்றனர். தற்போதைய தமிழக அரசு, ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்தி உண்மையை உலகுக்கு கொண்டு வரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.