
19 மாதங்களில் உதயநிதிக்கு கிடைத்த வெற்றி....!
உதயநிதியின் அமைச்சர் பதவி:
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த விஷயம் என்னவென்றால், அது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பாரா? என்பது தான். உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என்று திமுகவின் அமைச்சர்களே முதலமைச்சர் முகஸ்டாலினுடம் வலியுறுத்தி வந்த நிலையில், இது குறித்து உதயநிதியிடம் கேட்டபோது, நான் அமைச்சராவதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று கூறினார். இதனால் தமிழ்நாடு அமைச்சரவை பட்டியலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் தமிழ்நாடு அரசியலில் உலாவி வந்தது.
முற்றுப்புள்ளி வைத்த முகஸ்டாலின்:
இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் முகஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.
ஒப்புதல் அளித்த ஆளுநர்:
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர் நேற்றைய தினம் ஒப்புதல் அளித்ததோடு, ஆளுநர் மாளிகையின் முதன்மை செயலாளர் சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், வரும் டிசம்பர் 14 ஆம் தேதி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9.30 மணிக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, நாளை அமைச்சராக பதவியேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் அறைக்கு அருகில் உதயநிதி ஸ்டாலினுக்கான அமைச்சர் அரை விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
கருணாநிதி:
இந்நிலையில் திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் கிடைக்காத பெருமை உதயநிதிக்கு கிடைக்கப்போவதாக அரசியல் அரங்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, மறைந்த கலைஞர் கருணாநிதி, திமுகவில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற பின்னர் 10 ஆண்டுகள் கழித்து தான் கருணாநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
ஸ்டாலின்:
அதேபோல், திமுகவில் மேயர் மற்றும் எம்.எல்.ஏவாக இருந்த தற்போதைய முதலமைச்சர் முகஸ்டாலின், 17 ஆண்டுகள் கழித்து தான் அமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.
உதயநிதிக்கு கிடைத்த பெருமை:
ஆனால், நாளை அமைச்சராக பதவியேற்கவுள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தாவையும், அப்பாவையுமே ஓவர்டேக் செய்து வெறும் 19 மாதங்களில் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். இது உதயநிதிக்கு கிடைக்கும் பெருமை என அரசியல் அரங்கில் கூறிவருகின்றனர்.