கலைக்கப்படுகிறது உதயநிதி ரசிகர் மன்றம்?  இளைஞரணி பொறுப்புகளில் ரசிகர் மன்றத்தினர்

கலைக்கப்படுகிறது உதயநிதி ரசிகர் மன்றம்?  இளைஞரணி பொறுப்புகளில் ரசிகர் மன்றத்தினர்
Published on
Updated on
2 min read

2012 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலினுக்கு அப்போதே தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டது.  ஆரம்பத்தில் ரசிகர் மன்ற பணிகள் முழுவதையும் தற்போது அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஸ் கவனித்து வந்தார்.  மாவட்டம், ஒன்றியம் என நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு திரைப்படம் வெளியீட்டிற்கு மட்டுமல்லாமல், திமுக தேர்தல் பிரச்சாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளிலும் ரசிகர் மன்றத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

பிரச்சாரத்திற்கு மட்டுமா?:

கடந்த காலங்களில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த நட்சத்திரங்கள் தங்களது ரசிகர் மன்றங்களை கட்சியுடன் இணைக்கப்பட்டு தற்போது அவைகள் அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகின்றனர்.  10வருடங்களாக செயல்பட்டு வந்த உதயநிதி ரசிகர் மன்றத்தினருக்கு கட்சியிலும் சரி தேர்தலிலும் சரி எந்த வகையான பதவிகளும் பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை.  2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட்டனர்.  குறிப்பாக அன்பில் மகேஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவெறும்புதூர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதிகளில் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ரசிகர் மன்றத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர் மன்றம் டூ அரசியல் கட்சிகள்:

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்ததை தொடர்ந்து  கட்சியின் அனைத்து பிரிவினருக்குமான மாநில பொறுப்புகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் மாவட்ட அளவிலான பொறுப்புக்களுக்கு விண்ணப்பித்திருந்தனர் .அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இந்த தேர்வுகள் இருக்கும்.  தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை கட்சி தலைமை வெளியிடும். தற்போது சார்பு அணிகள் நிர்வாகிகள் பட்டியல் அனைத்து வெளியான நிலையில், இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிவில்லை. இப்பொறுப்பிற்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உதயநிதி ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் விண்ணப்பித்துள்ளனர். 

‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போது அப்படத்திற்கான Promotion வேலைகளில் ஈடுபடும் ரசிகர் மன்றங்கள் அடுத்த மாதம் கலைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கட்சி பணிகளில் முழுவீச்சில் இறங்கிய ரசிகர் மன்றத்தினரின் பலருக்கு விரைவில் இளைஞரணியில் முக்கிய பொறுப்புகள் அறிவிக்கப்படவுள்ளது. 

- மா.நிருபன் சக்கரவர்த்தி

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com