காந்த குரலால் வசிகரித்த வாணி.... அமைதியான அதிசய பொக்கிஷம்!!!

காந்த குரலால் வசிகரித்த வாணி.... அமைதியான அதிசய பொக்கிஷம்!!!

19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, தமிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத நபராக இணைந்து விட்ட வாணி ஜெயராமின் வாழ்க்கைப் பயணத்தை இப்போது பார்ப்போம்...  

தமிழர் உள்ளங்களில்:

1945-ம் ஆண்டு வேலூரில் கலைவாணி என்ற இயற்பெயரோடு பிறந்தவர் தான் வாணி ஜெயராம்.  1971-ம் ஆண்டு இந்தியில் வெளியான குட்டி படத்தில் போலே ரே பப்பி ஹரா என்ற பாடலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி,முதல் பாடலே அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இசையமைப்பாளர்களால் தேடப்படும் பாடகியாக உருவெடுத்தார்.  1974-ஆம் ஆண்டு கவிஞர் வாலி எழுத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் ’ மல்லிகை என் மன்னன் மயங்கும் ‘ என்ற பாடலை பாடி தமிழர் உள்ளங்களில் நீக்கமற இடம்பிடித்தார். 

காந்த குரலால்:

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இவரது  குரலில் "என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது ஆனால் அதுவும் ஆனந்தம்" என்ற பாடலை கண்மூடி லயித்து கேட்கும் போது விழிகளை தாண்டும் கண்ணீரை யாராலும் தடுக்க இயலாது. 

தன் காந்த குரலால் பாடல் கேட்பவரின் உணர்வுகளை உலுக்கி சங்கமிக்கும் விந்தைகாரி தான் வாணி ஜெயராம்.  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்..என்ற பாடல் தாளத்திற்கு ஏற்ற துள்ளல் நிறைந்ததாக அமைந்திருக்கும்.  வார்த்தை உச்சரிப்புகளில் அட்சர சுத்தம் நிறைந்திருக்கும். பாலைவனசாலை படத்தில் வரும் "மேகமே மேகமே " பாடலில் வரிக்கு வரி நெகிழ்ச்சியை உணர முடியும்.  அந்தமான் காதலியில் "நினைவாலே சிலை செய்துவைத்தேன் " என்ற பாடல் உறைந்து கிடக்கும்  அக ஊடாட்டங்களை தட்டி எழுப்பும். 

அனைத்தும்...:

இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தில் " ஒரே நாள் உனை நான்" என்ற பாடலில் காதல்தேன் சொட்டும்.  தான் பாடும் பாடலின் வாயிலாக , ரசிகர்களின் காதுகளின் வழியாக மனதிற்குள் இறங்கி சென்று, காதல், மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், குழப்பம், புத்துணர்ச்சி, காமம் ஆகியவற்றை துளியும் குறையாமல் கடத்தி தன் குரலால் என்றைக்குமே தமிழ் மக்களை ஆண்டு கொண்டிருக்கும் ஓர் பாடகிதான் வாணி ஜெயராம். 

விருதுகள்:

தலைமுறை கடந்து தன் தடம்பதித்த வாணி ஜெயராம் தேசிய விருது, பிலிம்பேர் விருது, நந்தி விருது, சிறந்த பின்னனி பாடகி விருது,பத்மபூஷண் விருது உட்பட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார். 

அதிசய பொக்கிஷம்:

திரையுலகில்  வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார்.  60 ஆண்டுகளை இசைக்காகவே அர்ப்பணித்து விட்ட வாணி ஜெயராம் தமிழ் சினிமா கண்டெடுத்த அதிசய பொக்கிஷம்.  தமிழ் திரையுலகில் இன்னும்  ஒலிக்க வேண்டிய குரல் தன் 78 வது  அகவையில் காற்றில் கரைந்து நிசப்தம் அடைந்திருக்கிறது.

இதையும் படிக்க:  உதவித்தொகையை நிறுத்துவதாக அறிவித்த மத்திய அரசு...கண்டனம் தெரிவித்த சிதம்பரம்!