
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த அணிவகுப்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் ஊர்திகள் பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் அணிவகுப்பில் பங்கேற்க இருந்த ஒரு ஊர்தியில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திர போராட்ட தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், தேசியக் கவி பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்காக தற்போது டெல்லியில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சுற்று ஒத்திகைகள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் சேர்க்கப்படவில்லை.
தென்மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தின் ஊர்தி மட்டுமே அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரம் மற்றும் பாரதியார் ஆகியோர் உலக அளவில் அறியப்பட்ட தலைவர்கள் இல்லை எனக் கூறி தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் அடங்கிய அலங்கார ஊர்தி அனுமதிக்கப்படாதது வேதனையளிப்பதாகவும், தேசியக் கவி பாரதியை பிரதமர் மேற்கோள் காட்டி பேசுவதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரையும், சுதேசித் தலைவன் வ உ சி யையும் நிராகரிக்க நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். குடியரசு தின அணிவகுப்பில் கோட்சேக்களையும், கோல்வார்க்கர்களையுமா அனுமதிப்பீர்கள் எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார் சு.வெங்கடேசன்.
ஒன்றிய மோடி அரசு நமது தமிழ்நாட்டை, வீரவரலாற்றை தொடர்ந்து அவமதித்து வருகிறது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதி ஆகியோர் சுதந்திரப்போராட்ட நெருப்பில் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த மாவீரர்கள், மகத்தான தியாகிகள். அத்தியாகிகளையும், தமிழ்நாட்டையும் அவமதிப்பதை மானமுள்ள தமிழினம் ஏற்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.
இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட போது, கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் 12 மாநில அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், எண்ணிக்கை காரணத்தால் மட்டுமே தமிழ்நாட்டின் ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக மேற்கு வங்கம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இடம் பெற்றிருந்த ஊர்தி அணிவகுப்பு அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.