மொத ஆளாக மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்… ரெய்டு பீதியில் கதிகலங்கியிருக்கும் மாஜிக்கள்!!

மொத ஆளாக மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

மொத ஆளாக மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்… ரெய்டு பீதியில் கதிகலங்கியிருக்கும் மாஜிக்கள்!!
தமிழகம் முழுவதும் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான  சென்னை, கரூர் உட்பட தமிழகம் முழுவதும் அவரது வீடு, சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்பு என 21 இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரும் பீதியில் உள்ளனர். 
 
இதில் குறிப்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள சாய் கிருபா குடியிருப்பில் அமைந்துள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பல கோடிகள் லஞ்சம் பெற்று முறைகேடாக கையொப்பம் வழங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக வந்த தொடர் புகாரின்பேரில் இந்த திடீர் சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 
 
மேலும் இந்த சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்களும், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி கையொப்பமிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளது.  குறிப்பாக சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் முறைகேடுகள் விவரங்களை பல கட்டுக்கட்டாக ஆதாரங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக வழங்கியது. ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது திமுக. ஆனால் அதிமுக ஆட்சி முடியும் வரை அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. 
 
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என ஸ்டாலின் முழக்கமிட்டார். திமுக ஆட்சி அமைந்ததும் அவர்கள் மீது  நடவடிக்கை பாயும் என கூறியிருந்தார். இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும், திமுக தலைவர்கள் மூலம் சமாதானப் பேச்சுகளை நடத்தியதாகவும் கூறப்பட்டது. 
 
முதல் ஆளாக நடிகையுடனான பலான மேட்டரில் சிக்கிய மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது ஊழல் செய்த மாஜி அமைச்சர்கள் பட்டியலை வைத்துக்கொண்டு ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. இதில், முதல் ஆளாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
ஏற்கனவே போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு 8 நிறுவனங்களிடம் மட்டும் ஜிபிஎஸ் கருவி வழங்க வேண்டும் என்ற அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அது ஏன் 118 நிறுவனங்கள் இருக்கும் போது குறிப்பிட்ட 8 நிறுவனங்களிடம் மட்டும் ஜிபிஎஸ் கருவிகள் வாங்க வேண்டும்? என கேட்டு அந்த உத்தரவுக்கு தடை விதித்திருந்தது.
 
அதேபோல் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் ஒளிரும் பட்டைகளையும் வாங்க போக்குவரத்துறையினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் சென்னை உயர்நீதிமன்றமே தடைவிதித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தியது. இந்த முறைகேடு விவகாரங்களை அப்போதைய எதிர்கட்சியாகா திமுக அறிக்கைகளுக்கு மேல் அறிக்கைகளில் விட்டது. இந்நிலையில் தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. 
 
திமுக அரசின் இந்த நடவடிக்கையானது கடந்த ஆட்சி காலத்தில் ஊழல் புகார்களில் சிக்கிய பல மாஜி அமைச்சர்களுக்கு பீதியை கொடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் லிஸ்டில் அடுத்து சிக்கப் போகும் மாஜி அதிமுக அமைச்சர்கள் யார்? என அதிமுக தலைமை வரை தலை கெட்டுப்போயுள்ளனர்.