காலியாகும் டிடிவி கூடாரம்... மூலைக்கு மூலை செக் வைப்பதால் வழிதெரியாமல் திசைமாறும் விசுவாசிகள்.! 

காலியாகும் டிடிவி கூடாரம்... மூலைக்கு மூலை செக் வைப்பதால் வழிதெரியாமல் திசைமாறும் விசுவாசிகள்.! 

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து சசிகலா கைகளில் அதிமுக வந்தது. அதன்பின் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதும் கட்சி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கட்டுப்பாட்டில் வந்தது. இவர்கள் இணைந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைத்தார்கள். இதன் காரணமாக டி.டி.வி. தினகரன் அமமுக என்னும் கட்சியைத் தொடங்கினார்.

அதிமுக தொண்டர்கள் அனைவரும் தன் பின்னால் வருவார்கள்,அதன்பின் கட்சி தன் கட்டுப்பாட்டில் வரும் என்றே தினகரன் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி நடக்காததால் அமமுகவிலிருந்த முக்கிய தலைவர்கள் திமுக,அதிமுக என இணைந்தனர். ஆனாலும் சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும் கட்சி தன் பின்னால் வரும் என்றும் தினகரன் தனது ஆதரவாளர்களிடம் கூறிவந்தார். 

அதன்படி சசிகலா சிறையிலிருந்து வந்ததும் அமமுகவினர் அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தார்கள். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். இது அமமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. கொஞ்சம் நாள் பொறுங்கள் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என தினகரன் கூறினார். ஆனால் தேர்தல் முடிவுகள் அமமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. டி.டி.வி. தினகரனே கோவில்பட்டியில் தோல்வியை தழுவினார். 

இதன் காரணமாக இனியும் தினகரனை நம்பவேண்டாம் என்று பல அமமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அமமுக நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த பரமசிவ அய்யப்பன், தன் ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துள்ளார். அவர் மூலமாக பிற அமமுக தலைவர்களுக்கும் திமுக குறிவைத்து வருவதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அமமுக தொண்டர்களை இழுக்க அதிமுகவும் முயன்றுவருகிறது.

அமமுகவின் இந்த நிலையை தினகரன் மாற்றவேண்டும், வீட்டில் முடங்கியிருக்காமல் தொண்டர்களை சந்தித்து பேச வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஒரு காலத்தில் கட்சியே காணாமல் போய்விடும் என தினகரனை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் தொண்டர்கள் கூறிவருகிறார்கள்.