நிதிஷின் அரசியல் எதிர்காலம்என்ன?

நிதிஷின் அரசியல் எதிர்காலம்என்ன?

கடந்த 3 ஆண்டுகளில் 4 மாநிலங்களில் கூட்டணி கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.  

சிக்கிம்:

சிக்கிமில் 2019ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.  மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் பெற்றன.  பாஜகவால் ஓர் இடத்தை கூட பெற முடியவில்லை.  இதனால் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் 10 எம்.எல்.ஏக்களை பாஜக வசம் இழுத்து சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.  

புதுச்சேரி:

2021ல் புதுச்சேரியில் காங்கிரஸின் ஆட்சி முடிவடைய இருந்த நிலையில் எம்.எல்.ஏக்களை கட்சி தாவ செய்து நாராயணசாமி ஆட்சியை கவிழ்த்து புதுச்சேரியில் ஆட்சியை  கைப்பற்றியது பாஜக.

கர்நாடகா:

2018ல் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 222 தொதிகளில் 104 இடங்களை கைப்பற்றியது பாஜக.  பெரும்பான்மை இல்லாததால் முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னரே பதவி விலகினார்.  இதனால்  78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி முதலமச்சராக பதவியேற்றார்.  ஓராண்டு காலத்திற்குள்ளாக 13 எம்.எல்.ஏக்களை அவர்கள் பக்கமாக இழுத்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

மத்தியபிரதேசம்:

2018ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.  அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.  ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல். ஏக்கள் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  அதன்பின் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தோல்வியடைந்தார்.  இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆபரேஷன் லோட்டஸ்:

தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என்பதால் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அக்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை அவர்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்த்தும் பாஜக ஆட்சியை மலர செய்தும் வருகிறது தேசிய ஜனநாயக கூட்டணி.  ஏற்கனவே 4 மாநிலங்களை இதே முறையில் கைப்பற்றியுள்ள பாஜகவின் பட்டியலில் இன்னும் சில மாநிலங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறிப்பாக காங்கிரஸ் தனித்து ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மீது அதன் முழு கவனமும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னுமொரு ஏக்நாத் ஷிண்டே:

பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைத்து வருகிறது.  ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஆர்.சி.பி.சிங் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார்.  ஊழல் குற்றசாட்டில் சிக்கியதால் ஐக்கிய ஜனதா தளத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகினார்.  இதனால் ஐக்கிய ஜனதா தளத்திலிருக்கும் எம்.எல்.ஏக்களை அவர் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்கும் வாய்ப்பு உள்ளது என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது.  இதனையடுத்து பாஜக தனித்து ஆட்சி அமைக்க நேரும் என்ற வதந்திகள் பரவ ஆரம்பித்ததாக தெரிகிறது.

நிலைப்பாட்டை மாற்றிய நிதிஷ்:

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்துகொள்ளவில்லை.  பாஜகவுடனான கூட்டணி முடிவுக்கு வர உள்ளதாக அப்போது தகவல்கள் பரவ தொடங்கின.  இதை உறுதி செய்யும் விதமாக இன்று அவரது கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தி பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டார் நிதிஷ்.  இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான மகாத்பந்தன் கூட்டணியை மீண்டும் புதுப்பித்துள்ளார் நிதிஷ்.

நிதிஷின் அரசியல் எதிர்காலம்:

2017ல் ஆட்சியின் போது துணை முதலமைச்சர் தேஜஸ்வி செய்த ஊழல் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்து ’மகாத்பந்தன்’ உடனான கூட்டணியை உடைத்து  பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் நிதிஷ் குமார்.  அதன்பின் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றினார்.  தற்போது மீண்டும் அவருடைய நிலைப்பாட்டை மாற்றி ஊழல் குற்றம் புரிந்த தேஜஸ்வியை துணை முதலமைச்சராக மாற்றி ஆட்சி அமைக்க போவதாக அறிவித்துள்ளார்.  இதனால் அவருடைய அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியெழுந்துள்ளது